ஞானகுரு பதில்கள்
ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.
கேள்வி : கல்வி என்று என்ன கற்கிறோம்..?
- டி.மணிகண்டன், கருப்பசாமி நகர்.
ஞானகுரு :
முன்னோர்களின் ஒட்டுமொத்த சிந்தனையே கல்வி. அதனை அனுபவித்துப் படிப்பவருக்கு வாழ்க்கை வசப்படும். வாழ்க்கையை எப்படி புரிந்துகொள்வது, மனிதர்களுடன் எப்படி நடப்பது, பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது, தவறுகளை எப்படி திருத்திக்கொள்வது என்பதையும் கற்றுக்கொள்வதே உண்மையான கல்வி.
பள்ளி, கல்லூரி நமக்கு படிக்க, எழுத, கணக்கிட, தொழில் செய்ய, உலக அறிவைப் பெற கற்றுத்தருகிறது. அதேநேரம் வாழ்க்கை நமக்கு பொறுமை, தோல்வியை ஏற்கும் மனநிலை, மனிதநேயம், உறவுகளின் மதிப்பு, தன்னம்பிக்கை, பொறுப்புணர்வு ஆகியவற்றைக் கற்றுத்தருகிறது.
உண்மையான கல்வி அகந்தையை குறைக்க வேண்டும், கேள்வி கேட்கச் சொல்ல வேண்டும், சிந்திக்க கற்றுத்தர வேண்டும், மற்றவரின் வலியை உணர வைக்க வேண்டும். பணம் சம்பாதிப்பது மட்டும் கல்வியின் நோக்கம் அல்ல. அறிவுடன் வாழவும், நெறியுடன் நடக்கவும், மனிதர்களை மதிக்கவும் கற்றுத்தருவதே கல்வியின் உயர்ந்த நோக்கம்.
கேள்வி : அரிய பிறவி என்பது மானிட பிறவியா?
- வி.ஜெயலட்சுமி, முத்து தெரு.
ஞானகுரு :
அவரவர் வாழ்வு அவரவருக்கு அரிது. அது மண் புழுவாக இருந்தாலும், மலராக இருந்தாலும், மனிதனாக இருந்தாலும் இயற்கைக்கு ஒன்றுதான். எல்லா உயிர்களும் வாழும் வரை போராடுகின்றன. தங்கள் இனத்தைப் பரப்புகின்றன. அவ்வளவுதான் இந்த வாழ்வு.
