ஞானகுரு பதில்கள்
ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.
கேள்வி : வாழ்க்கை பந்தயத்தில் ஜெயிக்க என்ன செய்ய வேண்டும்?
- சி.பிரியதர்ஷினி, பாண்டியன் நகர்
ஞானகுரு :
வெற்றி என்பது பசி போன்றது. மீண்டும் மீண்டும் பசிக்கும். அதனால் ஜெயிப்பதைவிட, பந்தயத்தில் பங்கேற்பதே வெற்றி என்று உணர்ந்துகொள்ளுங்கள். அதுவே, வெற்றி பெற்ற மகிழ்ச்சி கிடைத்துவிடும். வாழ்க்கை என்பது பந்தயம் அல்ல, அனுபவிக்க வேண்டிய ஆனந்தம்.
கேள்வி : கலாச்சார மாற்றங்கள் சரியானதா..?
- பி.பூவரசி, திருச்சி.
ஞானகுரு :
மனிதர்களின் வாழ்க்கையை எளிமையாக நடத்த உருவாக்கப்பட்டவையே கலாச்சார கோட்பாடுகள். பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்தபோதே, ஆண்கள் கட்டி வைத்த கலாச்சாரம் முடிந்துவிட்டது. கொரோனா காலத்திற்குப் பிறகு பல்வேறு கலாச்சாரங்கள் உடைந்து போய்விட்டது. படிக்கவும், வேலை பார்க்கவும் அலுவலகம் போக வேண்டியதில்லை என்று மாறிவிட்டது. திருமணம் என்பது கட்டாயம் இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. பெற்றோரை பிள்ளைகள் காப்பாற்ற வேண்டும் என்ற நிலை மாறிவிட்டது. கலாச்சாரம் மாறுவதும், மீறுவதும் காலம்காலமாக நடப்பதுதான், கவலைப்பட ஏதுமில்லை.
