ஆண்களின் மாயவலை
வாய்மை, நேர்மை, நட்பு போன்று ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பு என்பதும் பொதுவானது. ஆனால், இந்த உலகத்தில் பெண் கற்பு மட்டுமே முக்கியத்துவம் பெறுகிறது. புனிதமாகப் போற்றப்படுகிறது.
உண்மை என்னவென்றால், பெண்ணை அடிமையாக வைத்திருக்க ஆண்கள் பயன்படுத்தும் மாய வலையே கற்பு. இந்த சூழ்ச்சி புரியாமல் பெண்களும் கற்பு புனிதமானது என்று நம்புகிறார்கள்.
பெண்களின் கற்பை பறிப்பதில் ஆண்களுக்கு ஸ்பெஷல் சபலம் உண்டு. கற்பை பறிப்பதை ஒரு சாகசமாகக் கருதுகிறார்கள். பெண்களின் வீக்னஸ் அறிந்து துல்லியாக தாக்குதல் நடத்துகிறார்கள். அதாவது, ‘நான் உன்னை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன், உன்னை திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். என் மீது முழு நம்பிக்கை இருந்தால் மட்டும் படுக்கைக்கு வா…’ என்று வலை விரிப்பார்கள்.
இது எமோஷனல் பிளாக்மெயில் என்று அறியாமல் பெண் தடுமாறி விடுகிறார். இது போன்ற சூழலில் பெண் என்ன செய்ய வேண்டும்..?
உண்மையான காதலர் என்றால் அன்பு மட்டுமே எதிர்பார்ப்பார், நிறைய பேசுவதற்கு விரும்புவார். திருமணம் முடிப்பதற்கு ஆர்வம் காட்டுவார். உண்மையாக பெண் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் ஆண் திருமணத்திற்கு முன்பு படுக்கைக்கு அழைக்கவே மாட்டார். எனவே, இப்படிப்பட்ட ஆணிடம் உஷாராக இருக்க வேண்டும். ஏனென்றால் திருமணத்திற்குப் பிறகு இதை விட மோசமாக பிளாக்மெயில் செய்வார். யார் கூப்பிட்டாலும் படுக்கைக்குச் செல்வது வழக்கம்தானே என்று ஏளனம் செய்வார்.
அதேநேரம், கற்பு என்பது பெண்ணின் முடிவு. எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல் கற்பு குறித்து முடிவு எடுப்பதற்கு மேஜரான பெண்ணுக்கு முழு உரிமை உண்டு. அதேநேரம் எல்லை மீறுவதால் கர்ப்பம் அடையும் வாய்ப்பு பெண்ணுக்கு மட்டுமே இருக்கிறது. புகைப்படம், வீடியோ எடுத்து மிரட்டப்படும் சிக்கலும் பெண்ணுக்கு உண்டு. அவமானச் சின்னமாக மாறிவிடும் வாய்ப்பும் பெண்ணுக்கே இருக்கிறது. வழி மாறிப் போனதால் படிப்பு, வேலை என எதிர்காலத்தை இழக்கும் அபாயமும் பெண்ணுக்கு மட்டுமே உண்டு.
சுருக்கமாகச் சொல்வது என்றால் கற்பு என்பது பெண்ணுக்குப் பொக்கிஷம். அதை மனதுக்குப் பிடித்தவருடன் மட்டும் பகிர்ந்துகொள்ளுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
