வேதங்கள் காட்டும் பாதை
இந்த உலகில் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சை காலம் காலமாக இருந்துதான் வருகிறது. கண்ணுக்குத் தெரியாத காரணத்தால் கடவுள் இல்லை என்று ஒரு பிரிவினரும், கடவுள் இருக்கிறார் என்று ஒரு பிரிவினரும் வாதாடி வருகிறார்கள். ஆனால் அனைவருமே உயிர் இருக்கிறது என்பதை மட்டும் ஒப்புக்கொள்கிறார்கள். உயிர் என்பதை யாரும் கண்ணால் பார்த்தது இல்லை. தொட்டுப் பார்த்தது இல்லை. ஆனாலும் உயிர் இருக்கிறது என்பதை நம்புகிறார்கள்.
உயிர் என்பது மூச்சுக் காற்றில் இருக்கிறது என்றார்கள். அதன் பிறகு இதயத்தில் உயிர் இருக்கிறது என்று காலகாலமாக நம்பினார்கள். அதன் பிறகு உயிர் என்பது மூளையில் இருக்கிறது என்றார்கள். உண்மையில் உயிர் என்பது இதயம், மூளை மற்றும் பிராணவாயுவில் இல்லை என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். ஏனென்றால் இப்போது இதய மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன. அதேபோல் மூளையிலும் பல்வேறு சிகிச்சைகள் நடைபெறுகின்றன. பிராணவாயுவையும் கட்டுப்படுத்தும் அளவுக்கு மருத்துவம் முன்னேறிவிட்டது. அதனால் எந்த ஒரு மனித உறுப்பிலும் உயிர் என்பது தனியாக இல்லை என்பதுதான் உண்மை.
பிறகு உயிர் எங்கேதான் இருக்கிறது?
இந்து மதத்தின் ரிக் வேதமானது, ‘மனிதனின் ஆத்மாவானது பிரிந்துசென்றதும், அது தோன்றிய இடமான பரமாத்மாவுடன் கலந்துவிடுகிறது’ என்று சொல்கிறது. உயிர் என்பது பிராணவாயுவில் இருப்பதாகச் சொல்கிறது அத்வைதம்.
பிரகதாண்ய உபநிடதமானது, ‘நெருப்பில் இருந்து தீப் பொறிகள் உருவாவதைப் போன்று ஆன்மாவில் இருந்துதான் இந்த உலகில் உள்ள அத்தனை உயிர்களும் தோன்றுகின்றன, அங்கேயே போய்ச் சேருகின்றன’ என்கிறது.
முண்டக உபநிதமானது, ‘கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் இருந்து ஆயிரக்கணக்கான ஜுவாலைகள் தோன்றுவதைப் போலவே, அழிவே இல்லாத பிரம்மத்தில் இருந்துதான் கோடிக்கணக்கான உயிர்கள் தோன்றுகின்றன’ என்று சொல்கிறது.
