ஞானகுரு பதில்கள்
ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.
கேள்வி : இந்த உலகம் அழிவை நோக்கித்தானே போய்க்கொண்டு இருக்கிறது..?
- சி.அமுதா, கழுகுமலை.
ஞானகுரு :
உயிர் மட்டுமல்ல, உருவான எல்லாமே ஒரு நாள் அழியத்தான் போகிறது. ஆனால், இந்த உலகை கணிக்கவும், கவனிக்கவும் மனிதனின் மூளைக்கு ஆற்றல் போதாது. அதனால் இப்போதைக்கு மனிதர்கள், தங்கள் வாழ்க்கையை மட்டும் கவனித்தால் போதும். உலகத்தை இயற்கை பார்த்துக்கொள்ளட்டும்.
……………….
கேள்வி : இறை பக்தி நிம்மதி தருகிறது. இது, உண்மைதானே…?
- பி.முனியாண்டி, சண்முகம் தெரு.
ஞானகுரு :
குடிகாரர்களுக்கு மதுவில் நிம்மதி கிடைக்கிறது. குழந்தைகளுக்கு பெற்றோர் அரவணைப்பில் நிம்மதி கிடைக்கிறது. எல்லா மனிதர்களுக்கும் தூக்கத்தில் நிம்மதி கிடைக்கிறது.
ஆனால், இறைவனிடம் மட்டுமே நிம்மதி இருக்கிறது என்று சொல்லித்தான் இத்தனை கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் முளைத்திருக்கின்றன. ஆனால், துன்பங்களையும், துயரங்களையும் மனதார ஏற்பவனுக்குத்தான் நிம்மதி கிடைக்கும். இன்பமான நிம்மதியைத் தேடினால், அது இறைவனிடமும் இருக்காது.
……………………………
கேள்வி : விதியை மதியால் வெல்ல முடியுமா.. மரணம் பற்றி…?
- உ. தாமரைச்செல்வி, விருதுநகர்.
ஞானகுரு :
விதி என்று எதுவும் கிடையாது, அப்படியே இருந்தாலும் அது என்னவென்று யாருக்கும் தெரியாது. அதனால் விதியை வெல்லமுடியுமா என்ற கேள்விக்கே இடம் இல்லை.
தூக்கம் அன்றாடம் நடக்கிறது. தூக்கத்திற்குப் பின் எழுந்தால் வாழ்க்கை, எழவில்லை என்றால் மரணம். அதனால் ஒவ்வொரு மனிதரும் தினமும் செத்துத்தான் பிழைக்கிறார். மரணம் இல்லாமல் மனிதர் 150 வருடங்கள் வாழமுடியும் என்றால் 99 சதவீதம் பேர் தற்கொலை செய்துகொள்வார்கள். அதனால் மரணம் என்பது ஆனந்தமான விடுதலை. மரணம் வரும் வரை வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்.
