சின்னப் பிள்ளை பேசுனா சிரிக்கணும்

சூப்பர் காமெடி

சின்னப்பிள்ளைகளின் குறும்புப் பேச்சு சில சமயங்களில் பெரியவர்களையே தூக்கி சாப்பிட்டுவிடும். களுக்கென்று சிரிக்கவைக்கும் நகைச்சுவை இரண்டு இங்கே.

கடவுள் பார்வை

பள்ளியில் சிறுவர்களுக்குக் கொடுப்பதற்காக சாக்லேட் வைத்திருந்தார்கள். அதன் அருகில், ‘ஆளுக்கு ஒன்று மட்டும் எடுக்கவும்… கடவுள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்’ என்று எழுதி இருந்தது. அதன் அருகிலேயே பிஸ்கெட் வைக்கப்பட்டு இருந்தது. அதனை ஒரு சிறுவன் கை நிறைய அள்ளினான்.

உடனே அருகில் இருந்த சிறுவன், ‘ஒன்றுதான் எடுக்கவேண்டும். கடவுள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்’ என்று சொன்னான்.

அதற்கு அந்த சிறுவன், ‘கடவுள்தான் சாக்லேட்டைப் பார்த்துக்கொண்டு இருக்கிறாரே… நீயும் பிஸ்கெட்டை கூடுதலாக எடுத்துக்கொள்’ என்றானாம்.

சிறுவர்கள் எப்போதும் சிறுவர்கள்தான்.

………….

சட்டை பார்சல்

பூவுலகில் மிகவும் அராஜகம் செய்த ஒரு மனிதனை, செத்தபின்பு நரகத்துக்கு அழைத்துப் போனார்கள். ‘நான் நிறைய நல்லது செய்திருக்கிறேன்… என்னை சொர்க்கத்திற்குத்தான் அனுப்பவேண்டும்’ என்று அடம் பிடித்தான். அங்கே இருந்த அனைவரும் ஆச்சர்யமாகி, ‘நீ அப்படி என்ன நல்ல காரியம் செய்தாய்?’ என்று கேட்டார்கள். ஒரு நாள் மழை நேரத்தில் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த ஒருவனுக்கு என்னுடைய கிழிந்துபோன சட்டையைக் கொடுத்தேன் என்றார். அது உண்மை என்பது தெரிந்தது.

உடனே அந்த வாயில் காப்பாளன், ‘சரிப்பா, நீ சொன்னது உண்மைதான். நீ கொடுத்த கிழிந்த சட்டையைக் கொடுத்துவிடுகிறேன். நீ நரகத்துக்கே போ’ என்று ஒரு சட்டையை மந்திரத்தில் வரவழைத்து, நரகத்துக்குள் அனுப்பி வைத்தாராம்.

Leave a Comment