கமலாதாஸ் எனும் கவிதைக்காரி
இந்திய இலக்கிய உலகில் பெண்களின் மனஉணர்வுகளை எந்த மறைப்பும் இல்லாமல் வெளிப்படையாக எழுதிய எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் கவிஞர் கமலாதாஸ். பெண் என்ன நினைக்கிறாள்?, அவளின் ஆசைகள் என்ன?, காதல், திருமணம், தனிமை, உடல், மனம் – இவைகளை சமூகம் எப்படிப் பார்க்கிறது? போன்ற கேள்விகளை நேர்மையாக எழுத்தில் பதிவு செய்தவர். அதனால் தான் கமலாதாஸ் இந்திய இலக்கியத்தில் புரட்சிகரமான பெண் குரலாக நினைவுகூரப்படுகிறார்.
மாதவிக்குட்டி

கமலாதாஸ் 1934 மார்ச் 31 அன்று கேரளாவின் மலபார் பகுதியில் பிறந்தார். இவரின் இயற்பெயர் கமலா. மலையாளத்தில் மாதவிக்குட்டி என்ற பெயரிலும் எழுதியுள்ளார்.
இவரின் தாய் பாலாமணியம்மா புகழ்பெற்ற கவிஞர்; தந்தை வி.எம்.நாயர் பத்திரிகைத் துறையுடன் தொடர்புடையவர். வீட்டிலேயே இலக்கிய சூழல் இருந்ததால் சிறுவயதிலேயே கவிதை மற்றும் எழுத்தில் ஆர்வம் உருவானது.
கமலாதாஸ் முதலில் ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதத் தொடங்கினார். பின்னர் மலையாளத்திலும் சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் எழுதினார்.
அவரது எழுத்துக்களின் மிகப்பெரிய தனிச்சிறப்பு — உண்மையை மறைக்காமல் எழுதுவது. குறிப்பாக பெண்களின் மன அழுத்தம், காதல் ஏக்கம், திருமண வாழ்க்கையின் சிக்கல்கள், தனிமை, உடல் அரசியல் போன்ற விஷயங்களை வெளிப்படையாக எழுதினார். இது அந்தக் கால சமூகத்திற்கு அதிர்ச்சியூட்டியது.
அவரது மிகவும் சர்ச்சைக்குரிய படைப்பு My Story ஆகும். இதில் தனது வாழ்க்கை அனுபவங்களை மிகத் திறந்தவெளியாக எழுதியிருந்தார். இந்திய சமூகத்தில் பெண்கள் இப்படிப் பேசக்கூடாது என்ற மனநிலையை அந்த நூல் சவாலிட்டது.
கமலாதாஸ் படைப்புகள்
மாதவிக்குட்டி என்ற பெயரில் பல சிறுகதைகள் எழுதி மலையாள இலக்கியத்திலும் தனித்த இடத்தைப் பெற்றார். கமலாதாஸ் ஒரு கவிஞர் மட்டுமல்ல; பெண் சுதந்திரம் குறித்து தைரியமாக பேசிய சிந்தனையாளர்.
“பெண்கள் உணர்ச்சிகளை மறைத்து வாழ வேண்டியதில்லை.” என்ற கமலாதாஸ் எழுத்துகள் பெண்களின் மனநிலையை ஆழமாகப் பதிவு செய்ததால், இந்திய பெண்ணிய இலக்கியத்தில் அவருக்கு தனி இடம் கிடைத்தது.
மதமாற்ற சர்ச்சை
1999ஆம் ஆண்டு கமலாதாஸ் இஸ்லாம் மதத்திற்கு மாறி “கமலா சுரய்யா” என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். இந்த முடிவு இந்திய அளவில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.
அவர் இதை தனிப்பட்ட ஆன்மிகத் தேர்வாக விளக்கினார். ஆனால் சிலர் இதை விமர்சித்தனர். இருந்தாலும், தன் வாழ்க்கையை தன் விருப்பப்படி வாழ்ந்த பெண்ணாகவே அவர் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்.
எழுத்தின் சிறப்பு
அவரது கவிதைகளில் நேர்மை, உணர்ச்சி ஆழம், பெண்களின் உள்ளார்ந்த வேதனை, காதல் மற்றும் தனிமை, சமூக கட்டுப்பாடுகளுக்கு எதிரான குரல் போன்ற அம்சங்கள் தெளிவாகக் காணப்படும். அவர் எழுதிய மொழி எளிமையானதாக இருந்தாலும், அதன் தாக்கம் மிகவும் ஆழமானது. கமலாதாஸ் 2009 மே 31 அன்று காலமானார். ஆனால் அவரது எழுத்துக்கள் இன்னும் பல தலைமுறைகளுக்கு சிந்தனை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
அச்சமின்றி உண்மையை எழுதிய பெண் என்ற அடையாளத்துடன் வாழ்ந்த கமலாதாஸின் ஒரு கவிதையை தமிழில் படித்துப் பாருங்கள்.
எனக்கு அரசியல் தெரியாது; ஆனால் அதிகாரத்திலிருக்கும்
அந்தப் பெயர்கள் எனக்குத் தெரியும்;
கிழமைகளின் மாதங்களின் பெயர்களைப் போல அவற்றை என்னால் ஒப்பிக்க முடியும்.
நான் இந்தியப் பெண், மாநிறத்தவள், மலபாரில் பிறந்தவள்
மும்மொழி பேசுவேன், இரண்டில் எழுதுவேன், ஒன்றில் மட்டுமே என் கனவுகள்.
ஆங்கிலத்தில் எழுதாதே – அவர்கள் சொன்னார்கள்.
ஆங்கிலம் உன் தாய் மொழியன்று.
என்னை என் விருப்பம் போல் இருக்க விடுங்களேன்! விமர்சகர்களே, நண்பர்களே, ஒன்று விட்ட உடன்பிறப்புக்களே, எல்லாரும் தான்?
எனக்குப் பிடித்த மொழியில் என்னைப் பேச விடுங்களேன்?
நான் பேசும் மொழி எனதாகிறது, அதன் கோணல்களோடும், அதன் தனித்துவங்களோடும், எல்லாம் எனதே, எனது மட்டுமே.
என் மொழி கொஞ்சம் ஆங்கிலம், கொஞ்சம் இந்தியன், நகைப்புக்குரியது தான், ஆனால் நேர்மையானது, உயிருள்ளது, என்னைப் போலவே, உங்களுக்குத் தெரியவில்லையா?என் மகிழ்ச்சிகள், எனது ஏக்கங்கள், என் நம்பிக்கைகள், அனைத்துக்கும் குரல் கொடுக்கிறது என் மொழி.
காகங்களுக்குக் கரைதலைப் போல், சிங்கங்களுக்குக் கர்ஜனை போல் எனக்கு என் மொழி. மனித மொழி, மனங்களின் மொழி – பார்க்கவும் கேட்கவும் உணரவும் வல்லது.
புயல்காற்றில் அசையும் மரங்களும், மழை மேகங்களும், இடுகாட்டில் எரியும் தீயின் முணுமுணுப்பும் பேசும் குருட்டு ஊ*மை மொழியல்ல அது;
நான் குழந்தையாக இருந்தேன். என்னைப் பெரியவளாய் நடந்து கொள்ளச் சொன்னார்கள்.
ஏனென்றால் நான் உயரமானேன். என் கை கால்கள் வளர்த்தி அடைந்தன. உடலில் ஆங்காங்கே முடி முளைத்தது.
பதினாறு வயதில், வேறு எதுவும் கேட்கத் தெரியாமல் அன்பைக் கேட்ட போது, அறைக்குள் தள்ளிக் கதவைச் சாத்தினார்கள்.
என்னை அடிக்கவில்லை. ஆனால் பாவப்பட்ட என் உடல் வலியால் துடித்தது. என் மு*லைகளின் கனமும் கருப்பையின் கனமும் என்னை நொறுக்கிப் போட்டன. பரிதாபகரமாக குறுகிப் போனேன் நான்.
பிறகு, என் சகோதரனின் பேண்ட் சட்டைகளை அணிந்து கொண்டேன். தலைமுடியை வெட்டிக் கொண்டு என் பெண்மையை அலட்சியம் செய்தேன்.
சேலை கட்டு, பொம்பளைப் பிள்ளையா அடக்கமா இரு என்றனர்.
பூப்பின்னல் போடு, வாய்க்கு ருசியாச் சமைச்சுப் போடு, வேலைக்காரர்களுடன் வாய்ச்சண்டை போடு என்றனர்.
ஒத்துப் போ. கோட்டுக்குள் நில் என்றனர் கட்டமைப்புக் காரர்கள்.
சுவர்களின் மேல் அமராதே, எங்கள் திரைச்சீலையிட்ட சாளரங்களுக்குள் எட்டிப் பார்க்காதே.
ஏமியாக இரு, இல்லாவிட்டால் கமலாவாக. இன்னும் சொன்னால், மாதவியாகவே இரு.
ஒரு பெயரைத் தேர்வு செய்; ஒரு பாத்திரத்தையும். பாவனைகள் காட்டாதே. மனநிலை பிறழ்ந்தவளாகவோ காமஇச்சை தீராதவளாகவோ இருக்காதே. காதலில் துரோகமிழைக்கப் பட்டால் கோவென்று அசிங்கமாக அழாதே.
நான் ஓர் ஆணைச் சந்தித்தேன், காதலித்தேன். அவனுக்கு என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்.
எல்லா ஆண்களையும் போல் அவன் விரும்பியது ஒரு பெண். எல்லாப் பெண்களையும் போல் நான் விரும்பியது காதல்.
அவனுக்குள் நதிகளின் தீராத தாகம்.
எனக்குள் சமுத்திரங்களின் ஓயாத ஏக்கம்.
யார் நீ, நான் பார்க்கும் ஒவ்வொருவரையும் கேட்கிறேன்.
விடை என்னவோ நான் என்ற தன்முனைப்புத் தான். எங்கு பார்த்தாலும், எல்லா இடங்களிலும் இருப்பது ”நான்” தான்.
இந்த நான் என்பது தான் நள்ளிரவு பனிரெண்டு மணிக்குக் குடிக்கிறது, தெரியாத ஊர்களில், ஓட்டல்களில்,
இந்த நான் தான் சிரிக்கிறது, உட*லுறவு கொள்கிறது,
பின்பு வெட்கமும் அடைகிறது.
இந்த நான் தான் தொண்டையில் சிக்கிய முள்ளின் வேதனையோடு இறந்து போகிறது.
பாவியும் நானே, பரிசுத்தமானவளும் நானே.
காதலும் நானே, துரோகமும் நானே.
உன்னில் இல்லாத இன்பங்களும் என்னிடம் இல்லை, வலிகளும் இல்லை. எனக்குப் பெயரும் நான் தான்.
– கமலா தாஸ்
தமிழில்: ஜெ. தீபலட்சுமி (2009)
