குடும்ப உறவு உரசல்கள்
கணவன், மனைவி இருவரில் யார் உயர்ந்தவர் என்ற பிரச்னை நிறைய வீடுகளில் இருக்கிறது. தம்பதியர்கள் அன்னியோன்யமாக சந்தோஷமாக இருந்தாலும், உடன் இருப்பவர்களும் உறவினர்களும் எதையாவது சொல்லி, கணவன் மனைவிக்குள் பிரிவை உண்டாக்க நினைப்பார்கள். அதனால் அடுத்தவர்கள் சொல்வதை எப்போதும் யாரும் அப்படியே கேட்கக்கூடாது. ஏனென்றால், என்ன செய்தாலும் அதில் குறை கண்டுபிடிப்பவர்கள்தான் இந்த உலகில் அதிகம் இருக்கிறார்கள்.
ஆணுக்கு அவமானம்
ஒரு ஆண் கடுமையாக உழைத்தால், மனைவியை கவனிப்பதே இல்லை என்பார்கள். மனைவியை அன்பாகக் கவனித்துக்கொண்டால், பொண்டாட்டி முந்தானையை பிடிச்சுக்கிட்டு அலைகிறான் என்பார்கள். ஆண் அழுதால், பொம்பளை மாதிரி அழறதைப் பாரு என்று கிண்டல் செய்வார்கள். அழாமல் இருந்தால், நெஞ்சில் ஈவு, இரக்கமே இல்லாதவர் என்பார்கள்.
மனைவியைக் கேட்டு ஒரு முடிவு கணவன் எடுத்தால், சொந்தமாக முடிவு எடுக்கத் தெரியாத முட்டாள் என்பார்கள். மனைவியிடம் கேட்காமல் முடிவெடுத்தால், ஆண் என்ற அகங்காரத்தில் நடப்பதாகச் சொல்வார்கள்.
மனைவி, குழந்தைக்கு நிறைய வாங்கிக்கொடுத்தால், ஊதாரி என்பார்கள். எதையுமே வாங்கித் தராமல் இருந்தால், சம்பாதிச்சு என்ன செய்யப் போறான், கஞ்சப்பயல் என்பார்கள்.
மனைவியை வீட்டிலேயே வைத்திருந்தால், பெண்ணை அடிமைப் படுத்துவதாகச் சொல்வார்கள். வெளியே சென்றுவர அனுமதித்தால், ஊர் சுற்ற விடுவதாகச் சொல்வார்கள்.
இருவரல்ல ஒருவர்
அதனால் ஊரும் மற்றவர்களும் தினமும் எதையாவது பேசிக்கொண்டேதான் இருப்பார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டு நடந்தாலும் குற்றம்… நடக்காவிட்டாலும் குற்றம்தான். அதனால் மற்றவர்கள் சொல்படி நடக்காமல் தம்பதியர் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு நடக்க வேண்டும். தங்களுக்குள் யார் பெரியவர் என்ற ஈகோ வந்துவிடாமல், இருவரும் தனி நபர்கள் அல்ல… ஒருவர்தான் என்ற நினைப்பில் வாழவேண்டும்.
விளக்கு உயர்வானதா… அதில் இருந்து வரும் வெளிச்சம் உயர்வானதா?
வானம் அழகானதா… அதில் இருக்கும் நட்சத்திரங்கள் அழகானதா?
புல்லாங்குழல் அருமையானதா… அதில் இருந்து வரும் இசை அருமையானதா? என்று கேட்டுக்கொண்டே போகலாம்.
யார் பெரியவர்?
ஏன், இந்து மத புராணத்தில் இந்த பிரச்னை, ‘சிவன் பெரிதா… சக்தி பெரிதா..?’ என்று இறைவி பரமேஸ்வரி மூலமே எழுப்பப்பட்டுள்ளது. ஏன் தெரியுமா?
ஆணும் பெண்ணும் சமமானவர்களே… யாரும் யாரையும் விட உசத்தியும் இல்லை… மட்டமும் இல்லை. இருவரும் ஒன்று சேர்ந்தால்தான் அங்கே ஒரு முழுமை வரும். தலையும் பூவும் சேர்ந்தால்தான் அது நாணயம். இரண்டு பக்கமும் பூவே இருந்தால்… அது கள்ள நாணயமாகி விடும். இரண்டு கையும் சேர்ந்து தட்டினால்தான் ஓசை பிறக்கும். இரவும் பகலும் சேர்ந்தால்தான் நாள் முழுமை ஆகும். அதனால் ஆணும் பெண்ணும் சமம் என்பதில் உறுதியாக இருங்கள்… அதையே வாழ்வில் கடைப்பிடியுங்கள்.
