கணக்குப் போட்டுப் பாருங்க.
வீட்டுக்கு வீடு வாசல்படி என்பார்கள். அதாவது ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு குடும்பத்திலும் பிரச்னைகள், வேதனைகள், சிக்கல்கள் இருக்கவே செய்யும். ஆனால் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு, மற்றவர்கள் வாழ்க்கை மட்டும் சீரும் சிறப்புமாக இருப்பதாகவும், தங்கள் வாழ்க்கை மட்டுமே சிக்கலாக இருப்பதாகத் தோன்றும்.
திருமண உறவு ஒரே நாளில் உடைவதில்லை, ஒரே நாளில் ஒட்டுவதும் இல்லை. திருமணத்தில் தொடங்கும் பந்தம் ஒற்றுமையான தம்பதியர் என்ற நிலைக்கு வருவதற்கு நீண்ட கால பொறுமை தேவைப்படும் என்பதே உண்மை.
ஆறு கட்டங்கள்
திருமணம் என்பது ஒரு நாள் நிகழ்ச்சி. ஆனால், இதனால் உருவாகும் பந்தம் காலகாலமாக நீடிக்கக்கூடியது. இந்தப் பயணம் ஆறு முக்கிய கட்டங்களை கடந்தால் மட்டுமே வெற்றி அடைய முடியும். ஆனால் பெரும்பாலான தம்பதிகள் மூன்றாவது கட்டத்திலேயே மனம் தளர்ந்து விடுகிறார்கள். இந்த 6 கட்டங்களையும் உளவியல் ரீதியில் ஆழமாகப் புரிந்துகொண்டால், உறவை காப்பாற்றும் சக்தி தம்பதியருக்குக் கிடைத்துவிடும். ஆறு கட்டங்களையும் பார்க்கலாம்.
ஹனிமூன் காலம்
இந்த கட்டத்தில் எல்லாம் எளிதாகத் தோன்றும். ஒருவருக்கொருவர் அதிக அக்கறை காட்டுவார்கள். தவறுக்கு விரைவாக மன்னிப்பு கேட்பார்கள், குறைகளைப் புறக்கணிப்பார்கள். இவை எல்லாமே இயல்பாக நடக்கும். ஒவ்வொரு தொடுதலும் புதுமையாக இருக்கும். ஒவ்வொரு உரையாடலும் புதிய கண்டுபிடிப்பாக உணரப்படும். ஆனால், இது உண்மையான காதல் அல்ல; இது உடல் ஹார்மோன்களின் தாக்கம். இயற்கை, இருவரையும் ஒன்றிணைக்க உருவாக்கும் மாயம். மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் என்பார்களே, அது இந்த காலகட்டம்தான். இன்னும் சொல்லப்போனால் கணவன், மனைவி இருவரும் தங்கள் சுய உருவத்தைக் காட்டாமல், செயற்கையாக வாழும் காலகட்டம்.
நிஜத்தின் தரிசனம்
ஒன்றிரண்டு மாதங்களில் திருமணத்திற்கு தம்பதியர் எடுத்த விடுமுறைகள் எல்லாம் முடிந்து நிஜ உலகிற்கு வரவேண்டிய சூழல் உருவாகிறது. இந்த காலகட்டத்தில் உடல் ஹார்மோன்களின் தாக்கம் குறைந்து இயல்பு நிலைக்கு வருகிறது.
போலி முகத்தைக் கழட்டிவிட்டு நிஜ முகத்தைக் காட்டுவார்கள். ஆண் என்ற அதிகாரம் தென்படும். பெண் அலட்சியம் காட்டுவார். இதுவரை கவனிக்கப்படாத அல்லது கண்டும் பெரிதுபடுத்தாமல் இருந்த குற்றம், குறைகள் எல்லாம் இப்போது பெரிதாகத் தெரியும். சிறிய விஷயங்களுக்கும் சண்டை ஆரம்பமாகும்.
இங்கே தான் நிறைய பேர் தவறான நபரை தேர்வு செய்து ஏமாந்துவிட்டதாக நினைக்கிறார்கள். தங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக வருந்துகிறார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள். உறவுகள், நட்புகளிடம் வருந்துகிறார்கள். எல்லோரிடமும் ஆலோசனை கேட்கிறார்கள்.
ஏமாற்றக் காலம்
ஆணும் பெண்ணும் ஒருபோதும் ஒரே மாதிரி சிந்திக்க முடியாது. இரண்டு நபர்கள் சேர்ந்து இருந்தாலே பிரச்னைகள் வரும் என்பதை சிலர் மட்டுமே புரிந்துகொள்ளத் தொடங்குகிறார்கள். ஆனால், நிறைய பேர் தங்கள் துணையின் நிஜமான முகத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். சிந்திக்க முடியாமல் மன அழுத்தத்தில் மாட்டிக்கொள்கிறார்கள்.
உறவுகளிடம் தவறான ஆலோசனைகளைக் கேட்கிறார்கள். அவர்கள் தரும் ஆதரவை நம்பி சண்டை போடுவதால் இந்த காலகட்டத்தில் நிறைய உறவுகள் உடைந்து போகின்றன. இவர் நான் எதிர்பார்க்கும் துணை அல்ல, எனக்கு சரியான நபர் அல்ல என்ற எண்ணங்கள் வரும். தவறான ஒருவரைத் தேர்வு செய்துவிட்டதாக குற்றம் சாட்டி சண்டை போடுவார்கள்.
உண்மையில், இது தவறான தேர்வு இல்லை. அதாவது, கற்பனை செய்த உருவம் உடைந்து, உண்மை வெளிப்பட்டுள்ளது என்றே பார்க்கவேண்டும். இதை ஏற்க முடியுமா அல்லது இல்லையா என்பதுதான் கேள்வி. இவர் மட்டுமல்ல, வேறு யாரை கல்யாணம் முடித்திருந்தாலும், இப்படியொரு முகத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த காலகட்டத்தில் சண்டை பெரிதாக நடக்கும். இந்த சண்டையை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் பிரியும் முடிவுக்கு வருகிறார்கள். கல்யாணம் என்றால் இப்படித்தான் இருக்கும். ஆனால், போகப்போக சரியாகிவிடும் என்ற புரிதலும், நம்பிக்கையும் உள்ளவர்கள் அடுத்த கட்டத்திற்குள் நுழைகிறார்கள்.
விட்டுக்கொடுத்தல்
கல்யாணம் என்றால் இப்படித்தான் என்ற புரிதலே அடுத்த கட்டத்துக்கு அழைத்துச்செல்கிறது. விட்டுக்கொடுப்பதும், குறைகளுடன் ஏற்றுக்கொள்வதும் முக்கியம் என்ற கட்டத்தை அடையும் தம்பதிகளே சரியான நிலைப்பாட்டை எடுக்கிறார்கள். ஒருவர் மற்றவரை மாற்ற முயற்சிப்பதை நிறுத்துகிறார்கள். பதிலாக, ஒருவருடன் ஒருவர் பொருந்திக் கொள்ள கற்றுக்கொள்கிறார்கள்.
இது ரொமான்ஸ் நிறைந்த கட்டம் அல்ல; ஆனால் உறுதியான உறவு உருவாகும் அடித்தளம் இதுவே.
“ஏன் நீ இப்படியில்லை?” என்ற கேள்வி மாறி “நாம் எப்படி இதைச் சரிசெய்வது?” என்ற அணுகுமுறை உருவாகிறது.
நெருக்கமான உறவு
அவர் இப்படித்தான் என்று ஒருவரையொருவர் புரிந்துகொள்வதும் ஏற்றுக்கொள்வதும் தம்பதியர் உறவை உறுதியானதாக மாறுகிறது. இந்த காலகட்டத்தில் ஒருவரை ஒருவர் ஆழமாக அறிந்திருப்பீர்கள்.
சொல்லாமலே ஒருவரைப் பற்றி மற்றவர் புரிந்துகொள்ளும் நிலை வரும். இந்த காலகட்டத்தில் திருமண காலத்தின் ஆரம்ப உற்சாகம் இருக்காது என்றாலும், அதைவிட வித்தியாசமான நம்பிக்கையும் பாதுகாப்பும் கிடைக்கும். இதுதான், போராட்டங்களை கடந்து வந்த தோழமை உறவு.
ஆழமான காதல்
நெருக்கமான உறவு இருந்தாலும் ஆழமான காதல் என்ற இறுதிக் கட்டத்தை சில தம்பதியரே அடைகிறார்கள். இங்கே காதல் நிபந்தனையற்றதாக மாறுகிறது. குறைபாடுகள் தெரியாமல் அல்ல, தெரிந்தும், அதை ஏற்றுக்கொண்டு நேசிக்கும் நிலை இது. மௌனத்திலும் நெருக்கம் இருக்கும். எந்த சண்டைகளும் உறவை உடைக்காது.
ஒருவரின் மோசமான தருணங்களை பார்த்தபிறகும், அவருடன் இருக்கத் தேர்வு செய்வதே இந்தக் காதல். இந்தக் கட்டம் எளிதாக கிடைப்பதில்லை. நிறைய சண்டை, நிறைய சமாதானம், நிறைய மன்னிப்பு, நிறைய புரிதல், நீண்ட பொறுமை ஆகியவற்றுக்கும் கிடைக்கும் பரிசு இது.
திருமணம் என்பது உணர்ச்சியின் உச்சம் அல்ல; அது புரிதலின் உச்சம்.
மூன்றாவது கட்டத்தில் விட்டுவிடாமல், நான்காவது கட்டத்திற்குள் நுழையும் துணிச்சல் இருப்பவரே வெற்றிகரமான தம்பதியாக முடியும். முதல் மூன்று கட்டங்களுக்கும் 10 மதிப்பெண்கள் மட்டுமே. எனவே, இந்த கட்டங்களைத் தாண்டி நான்காவது கட்டத்திற்கு நுழைபவர்களுக்கே 20 மதிப்பெண் கிடைக்கிறது. அவர்களே வாழ்க்கை பரீட்சையில் தேர்வு அடைகிறார்கள். ஐந்தாவது கட்டத்துக்கு 20 மதிப்பெண்கள், ஆறாவது கட்டத்துக்கு 30 மதிப்பெண்கள்.
இந்த ஆறாவது கட்டத்தை அடைந்தவர்களை தம்பதியர் என்று சொல்வதை விட, நல்ல துணை, நல்ல நட்பு என்றே சொல்ல வேண்டும். இந்த கட்டத்தை நோக்கி முன்னேற விரும்புங்கள். அதுவே, நல்வாழ்வு.
