ஞானகுரு பதில்கள்
ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.
கேள்வி : மாத்தி யோசி என்கிறார்களே எப்படி மாத்தி யோசிப்பது?
- டி.தண்டாயுதபாணி, சிவகாசி.
ஞானகுரு :
விபத்தில் சிக்கி கால் உடைந்துவிட்டால், நல்லவேளையாக தலையில் அடிபடவில்லை என்று ஆறுதல் அடைவதுதான் மாத்தி யோசி. காலையில் எழுந்து அவசரம் அவசரமாக சமைப்பது சிக்கலாக இருந்தால், முதல் நாள் இரவே தயாராக எடுத்து வைப்பது மாத்தி யோசிப்பது. வலுவான நம்பிக்கையும் வெற்றிக்கான ஆசையும் இருப்பவர்களே மாற்றி யோசிக்கிறார்கள்.
…………………
கேள்வி : எல்லா நேரமும் எல்லா மனிதர்களும் செல்போனில் நேரத்தைப் போக்குகிறார்கள், இந்த மாற்றத்தை எப்படி பார்ப்பது..?
- பி.சந்திரன் மல்லாங்கிணறு
ஞானகுரு :
நாடக மோகம், சினிமா மோகம், தொலைக்காட்சி மோகம் போன்று இதுவும் ஒரு நாள் மறைந்துபோகலாம். அப்போது, இதை விட வேறு ஒன்று மனிதர்களை ஆக்கிரமித்திருக்கும்.
