ரவுடி குழந்தையை திருத்துவது எப்படி?

ஞானகுரு பதில்

கேள்வி : தாய், தந்தைக்கு அடங்காத பிள்ளையை எப்படி திருத்துவது..?

  • ஏ.அனந்தி, சிவகாசி.

ஞானகுரு :

பயிருக்கு விதை போட்டு, தண்ணீர் ஊற்றி, வேலி போட்டு பாதுகாப்பது முக்கியம். அதேநேரம், பயிரில் இருந்து எப்படிப்பட்ட விளைச்சல் கிடைக்கும் என்பதை யாராலும் தீர்மானிக்க முடியாது. ஏனென்றால் வெயில், புயல், மழை, பூச்சிகள் போன்று பல்வேறு காரணிகள் அதை தீர்மானிக்கின்றன. பிள்ளை வளர்ப்பும் அதே போன்றுதான்.

உணவு, படிப்பு, அன்பு கொடுத்து வளர்க்கும் எல்லா பிள்ளைகளும் நல்ல பிள்ளையாக வளர்வது உறுதி இல்லை. சில குழந்தைகளின் மரபணுக்களில் சிக்கல் இருக்கலாம்.

பிள்ளைகள் தவறு செய்யும்போது அடக்கியும் அடித்தும் வளர்க்கவேண்டிய அவசியம் இல்லை. அதற்குப் பதிலாக பிள்ளைகளுக்கு பெற்றோரிடம் பயம் இல்லாமல் வளர்க்க வேண்டும். ஏனென்றால் பெற்றோர் அடிப்பார்கள் என்ற பயத்தில்தான் பொய் சொல்லத் தொடங்குகிறார்கள். பொய்தான் அனைத்து கெட்ட பழக்கத்திற்கும் ஆரம்பப்புள்ளி.

உண்மை பேசுவது, பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் வாழ்வது, வெற்றி தோல்வியை ஏற்றுக்கொள்வது, மற்றவர்களுக்கு மதிப்பு கொடுப்பது போன்ற அடிப்படைக் குணங்களை பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பது பெற்றோரின் முக்கிய கடமை. சொல்லிக்கொடுப்பது போன்று பெற்றோர்களும் வாழ்ந்து காட்டவேண்டியது அதைவிட முக்கியம்.

உணவும் கல்வியும் கொடுக்கவேண்டியது மட்டுமே பெற்றோர் கடமை. தவறு செய்யும்போது கண்டியுங்கள். இதை தாண்டி பிள்ளைகள் அடங்கவில்லை என்றால் விலகி நில்லுங்கள். அடிபட்டு தானே திருந்தட்டும். அவர்களாகத் திருந்தவில்லை என்றால் காவல் துறையும், நீதிமன்றமும் பாடம் புகட்டும். இதற்கு பெற்றோர் குற்றவுணர்வு கொள்ள அவசியமில்லை.

Leave a Comment