ஞானகுரு பதில்கள்
கேள்வி : ஆபத்தான நோயில் சிக்கியிருக்கிறேன். உயிர் பிழைப்பதே சந்தேகமாக இருக்கிறது. இப்போது நான் என்ன செய்ய வேண்டும்..?
- எஸ்.சரஸ்வதி, சேலம்.
ஞானகுரு ;
எல்லாமே முடிஞ்சு போச்சு அப்படிங்கிற மோசமான ஒரு நிலை எல்லா மனிதருக்கும் வரலாம். இப்போது இரண்டு வழிகள் இருக்கின்றன. முதலாவது, ரொம்ப மோசமாக மாட்டிக்கிட்டேன், இனி தப்பிக்கவே முடியாதுன்னு உறுதியா நம்புறது. இதனால் மேலும் மேலும் வருத்தம் அதிகமாயிட்டே இருக்கும்.
இரண்டாவது, இந்த நிலையில் இருந்தும் தப்புவதற்கு ஏதேனும் வழி இருக்கும் என்று நம்பிக்கையுடன் தேடுவது. இருட்டான காட்டுக்குள், ஒரு விளக்கைப் பிடித்துக்கொண்டு முன்னேறிச் செல்லும் வழி. கண்டிப்பாக வழி கிடைக்கும்னு சொல்ல முடியாது. ஆனால், கடைசி வரை நம்பிக்கையுடன் தேடிக்கொண்டு இருக்க முடியும். வழி கிடைத்தால் நல்லது, கிடைக்காவிட்டாலும் எதுவும் கெட்டுப் போவதில்லை. இருளை விரட்டுவதற்கு இருட்டால் முடியாது. ஒளியால் மட்டுமே இருட்டை விரட்ட முடியும் என்பதை நம்புங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
