ஞானகுரு பதில்கள்
கேள்வி : குழந்தைகளுக்கு எப்போதும் செல்லம் கொடுக்கலாமா?
- டி.மணிபாரதி, முதுகுளத்தூர்.
ஞானகுரு :
சந்தோஷமாக இருக்கும் நேரத்தில் குழந்தைக்கு செல்லம் கொடுப்பது எல்லோருக்கும் சாத்தியமான விஷயம். அதேநேரம் பரபரப்பான வேலையில் இருக்கும்போது அல்லது துன்பத்தில், சோகத்தில் இருக்கும்போதும் பிள்ளைக்கு செல்லம் கொடுப்பீர்களா என்று யோசித்துப் பாருங்கள். அதற்கு வாய்ப்பே இல்லை என்பது புரியும். ஆனால், எல்லா நேரங்களிலும் குழந்தையிடம் அன்பு செலுத்த முடியும். எது சாத்தியமோ, அதை மட்டும் செய்யுங்கள்.
அதிகம் செல்லம் கொடுப்பது அடம் பிடித்தலை உருவாக்கும். தான் மட்டுமே முக்கியம், ஸ்பெஷல் என்ற குணம் குழந்தையிடம் உருவாகும். போட்டிகள் நிறைந்த எதிர்கால உலகை ஜெயிக்க வேண்டும் என்றால், பிள்ளைக்கு மனவலிமை தேவை. அதற்கு, புறக்கணித்தலையும் பிள்ளை அனுபவிக்க வேண்டும்.
கேள்வி : பயணங்கள் மனமாற்றம் தருமா?
- வி.சந்தானம், கூடலூர்.
ஞானகுரு :
மாற்றங்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் மனம் இல்லை என்றால் காஷ்மீர் பனி மலைக்குச் சென்றாலும் கூட ஆனந்தம் கிடைக்காது. முதலில் சின்னச்சின்ன மாற்றங்களையும் ரசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். கட்டிலை வேறு பக்கம் திருப்பிப்போட்டு படுத்தால்கூட புது சுகத்தை அனுபவிக்கும் மனநிலைக்கு வாருங்கள். அப்போதுதான், பயணம் மனசுக்குள் மாபெரும் புரட்சியை உருவாக்கும்.
