மணி மேனேஜ்மெண்ட்
வாழ்நாள் முழுவதும் சிலர் உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். எதிர்காலத்துக்குத் தேவையான அளவு பணம் சேமித்து விட்டால், அதன் பிறகு நிம்மதியாக ஓய்வு எடுக்கலாம் என்று சொல்வார்கள். ஆனால், எதிர்காலத்துக்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்று முடிவு எடுக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். எதிர்காலத்துக்கு எவ்வளவு பணம் தேவை என்று திட்டமிடுவதற்கு இந்த ஐந்து கட்டளைகள் கடைப்பிடித்தால் போதும்.
- எதிர்காலத்தில் பிள்ளைகள் பார்த்துக்கொள்வார்கள் என்று நம்பி இருக்காதீர்கள். பிள்ளைகள் அவரவர் வாழ்க்கைக்கே முன்னுரிமை கொடுப்பார்கள். எனவே, எதிர்காலத்துக்குத் தேவையானதை அவரவர் சேமித்துக்கொள்ள வேண்டும்.
- எதிர்காலத்தில் எங்கு, எப்படி வாழப் போகிறீர்கள் என்பதை 50 வயதிலே முடிவு எடுங்கள். கிராமத்துக்குச் செல்வது, நகரத்தில் வசிப்பது, முதியோர் இல்லம் என எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. முன்கூட்டியே இடத்தைத் தேர்வு செய்துவிட்டால் அதற்கேற்ப சேமிப்பது எளிது.
- பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்துவைக்கும் அவசியம் பெற்றோருக்கு இல்லை. எனவே, சம்பாதித்ததை எதிர்காலத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
- வயதான பிறகு உணவு, உடை, வீடு, மருத்துவம் தவிர பெரிதாக எதுவும் தேவைப்படாது. இந்த உண்மை புரிந்துவிட்டால் அதிகம் பணம் சேர்க்கும் ஆசை வராது.
- போதும் என்ற மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால், என்ன இருக்கிறதோ அதைக் கொண்டு நிம்மதியாக வாழ்ந்துவிட முடியும்.
எதிர்காலம் என்பது அழகான கற்பனை. எனவே, எல்லாம் நல்லதாகவே நடக்கும், என்ன நடந்தாலும் மகிழ்ச்சியுடன் வாழ முடியும் என்று நம்புங்கள். பணத்தால் மட்டும் எதிர்காலத்தில் யாரும் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியாது. அதேநேரம், பணம் இல்லாமலும் யாரும் மகிழ்ச்சியாக வாழ முடியாது. எனவே, சரியாகத் திட்டமிடுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
