ஐந்து கட்டளைகள்
பெற்றோர் காட்டிய மாப்பிள்ளைக்கு பெண்கள் கழுத்தை நீட்டிய காலம் மலையேறிவிட்டது. அதேபோன்று மணப்பெண் எப்படி இருக்க வேண்டும் என்ற ஆண்களின் விருப்பங்களும் மாறிவிட்டன. ஆணும், பெண்ணும் நிறைய கட்டுப்பாடுகள் விதிப்பதால் திருமணம் அமைவது ரொம்பவே தள்ளிப் போகிறது.
உண்மையில் ஒரு நல்ல துணையை தேர்வு செய்வதற்கு இந்த ஐந்து விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும்.
- உறவினர், நண்பர்களுக்கு எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறார் என்பதைக் கவனியுங்கள். உறவுகளுக்கு மரியாதை கொடுப்பவர் துணையாக வருபவருக்கும் நிச்சயம் மதிப்பு கொடுப்பவராக இருப்பார்.
- முக அழகுக்கு அதிக முக்கியம் தேவையில்லை. அதேநேரம், உடல் தன்மைக்கேற்ற ஆடை, பொருத்தமான ஹேர்ஸ்டைல் போன்றவைகளுடன் உடலை லட்சணமாகப் பராமரிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
- 30 ஆயிரம் வருமானத்தில் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துபவர்கள் உண்டு, ஒரு லட்சம் சம்பளம் வாங்கியும் மாதக் கடைசியில் திண்டாடுபவர்கள் உண்டு. ஆகவே, பணத்தின் மதிப்பு தெரிந்தவராக இருக்க வேண்டியது அவசியம்.
- ஒரு சில விஷயங்களில் அழுத்தமான நம்பிக்கை கொண்டவராக இருக்கலாம். அந்த குணத்தை ஏற்றுக்கொள்ள முடியும் என்றால் மட்டும் ஒப்புக்கொள்ளுங்கள், திருமணத்திற்குப் பிறகு அந்த குணத்தை மாற்றிவிடலாம் என்று நம்பி கல்யாணம் முடிக்காதீர்கள்.
- பொறுப்பு, கடமை ஆகியவற்றை உணர்ந்து செயல்படுபவர் என்றால் விட்டுக்கொடுக்கும் குணம் இருக்கும்.
ஆகவே, இந்த ஐந்து விஷயங்களையும் ஆய்வு செய்து சரியான நபரை தேர்வு செய்யுங்கள். ராசி, நட்சத்திரம், ஜாதகப் பொருத்தம் ஆகியவற்றைப் பார்த்து யாரையும் நிராகரிக்காதீர்கள். மகிழ்ச்சியாக வாழுங்கள்.
