வறண்ட குளத்தில் மீன்கள் எப்படி வந்தன?

உயிர் எனும் புதிர்

விஞ்ஞான வளர்ச்சியில் உச்சம் அடைந்துவிட்டதாக மனிதர்கள் மார்தட்டிக் கொள்கிறார்கள். ஆனால், உயிர் என்ற விஷயத்தைப் பொறுத்தவரை மனிதர்களால் எதுவுமே சாதிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

விண்வெளியைத் தாண்டிச் செல்லும் ஓடத்தையும், கடலின் ஆழம் வரையில் பாயும் நீர்மூழ்கிக் கப்பலையும் படைத்திருக்கலாம். ஆனால், மனிதனால் ஒரே ஒரு எறும்பு அல்லது கொசு போன்ற உயிரையாவது படைக்கமுடியுமா? இறந்துபோன ஒரு உடம்புக்கு உயிர் கொடுக்கத்தான் முடியுமா? காலகாலமாக நீடித்துவந்த மர்மப் புதிர் இந்தக் காலத்திலும் நீடிக்கத்தான் செய்கிறது. பிறகு எப்படி மனிதனை மாபெரும் சாதனை படைத்தவனாகச் சொல்லமுடியும்?

பழைய சினிமாக்களில் மந்திரவாதிகளிடம் விசித்திரமான செய்கையைப் பார்க்கமுடியும். அதாவது, அவர்களது உயிரை ஏதாவது ஒரு இறந்துபோன புறா அல்லது வண்டுவின் உடலுக்குள் செலுத்தி, ஏழு கடல்… ஏழு மலை தாண்டி பத்திரமான ஒரு இடத்தில் விட்டுவைப்பார்கள். கதாநாயகன் மிகவும் பிரயத்தனப்பட்டு அந்த இடங்களுக்கு எல்லாம் பயணமாகி அந்த உயிரை அழித்த பிறகுதான் மந்திரவாதி அழிவான்.

உண்மையில் தங்கள் உயிரை உடலில் இருந்து பிரிக்கும் வல்லமை யாருக்காவது இருக்க முடியுமா என்ன? அப்படி ஒரு சாதனையைச் செய்துவிட்டால் அவர்தானே இறைவனாக இருக்கமுடியும். உயிரின் சூட்சுமத்தைப் புரிந்துகொள்ளும் வல்லமையும் திறனும் மனிதனுக்கு என்றுமே வராது என்பதுதான் இந்து மதம் சொல்லும் தத்துவம்.

இந்த உலகில் வாழ்ந்த மாபெரும் ஞானியான கௌதம புத்தர் உயிர் பற்றி மிகத் தெளிவான கருத்தைச் சொல்லி இருக்கிறார்.

அகல் விளக்கு எரிகிறது. அந்த அகல் விளக்கில் இருந்து இன்னொரு விளக்கை ஏற்றினால், அதுவும் எரிகிறது. அந்த அகல் விளக்கில் இருந்து ஆயிரக்கணக்கான விளக்குகளை ஏற்ற முடியுகிறது. அந்த வெளிச்சம்தான் உயிர் என்கிறார் புத்தர். விளக்கு அணையும்போது வெளிச்சம் போய் விடுகிறது. எங்கே இருந்து வெளிச்சம் வந்ததோ, அங்கேயே போய்விடுகிறது. அதுதான் உயிரின் தத்துவம் என்கிறார். வெளிச்சத்துக்கும் உயிருக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது என்கிறார்.

ஆம், உயிர் எப்படியெல்லாம் உருவாகிறது என்று நினைத்துப் பார்த்தால் நமக்கே அதிசயமாகத்தான் இருக்கும். குளம் வறண்டுபோய் கிடக்கும். ஒரு மழை பொழிந்து குளம் நிரம்பினால், சில நாட்களில் அங்கே மீன்களும், தவளை, நண்டுகளும் விளையாடிக் கொண்டிருக்கும். இத்தனை நாட்களும் அவை எங்கே இருந்தன என்பதுதான் ஆச்சர்யம்.

இறைச்சி கீழே எறியப்பட்டால் இரண்டே நாட்களில் அந்த இறைச்சி முழுவதும் புழுவாகி விடுகிறது. அப்படியென்றால் அந்த இறைச்சிகளுக்கு உள்ளேதான் இத்தனை நாட்களும் புழு, பூச்சிகள் இருந்தனவா? உயிர் என்பதில்தான் எத்தனை ஆச்சர்யம்?

Leave a Comment