ஞானகுரு பதில்
சண்டை படம் பார்த்தால் நரம்புகள் முறுக்கேறும். காதல் படம் பார்த்தால் உடலுக்குள் ஒரு கிளுகிளுப்பு உருவாகும். அதேபோல், தேசபக்தி சினிமா பார்த்தால் சிலருக்கு நாட்டுக்கு சேவை செய்யும் எண்ணம் தோன்றிவிடும்.
உண்மையில் பிறந்த நாட்டுக்கு தனி மனிதராக ஒருவர் செய்ய வேண்டிய காரியம் பெரிதாக ஒன்றுமில்லை. உணவை வீணாக்க வேண்டாம்.
வீடு தொடங்கி ஹோட்டல், திருமண வீடுகளில் எக்கச்சக்கமான உணவை வீணடிக்கிறார்கள். ஒவ்வொரு தானியமும் விளைவதற்கு எத்தனை பேர் எத்தனை விதங்களில் கஷ்டப்பட்டிருப்பார்கள் என்ற எண்ணமே இல்லாமல் மீதமிருக்கும் உணவை குப்பையில் கொட்டுகிறார்.
இப்படி, தட்டில் வைத்த உணவை வீணாக்கும் முன் தெற்கு சூடான், கனீவா, மடகாஸ்கர் போன்ற தென்னாப்பிரிக்க நாட்டு மக்கள் பசியுடன் துடிப்பதைக் கண்ணுக்குள் கொண்டுவாருங்கள்.
மிச்சப்படுத்தும் ஒவ்வொரு தானியமும் வேறு யாரேனும் ஒருவரின் வயிற்றுப்பசிக்கு உணவாகலாம். உணவு மட்டுமின்றி தண்ணீர், மின்சாரம் என எந்த ஒன்றையும் வீணாக்காதீர்கள். வேண்டுதல் என்று தேங்காய் உடைப்பது, பூசணிக்காய் உடைப்பது போன்று எந்த ஒன்றையும் வீணாக்காதீர்கள். இதுவே, நாட்டுக்கும் மக்களுக்கும் இயற்கைக்கும் மனிதர்கள் செய்யவேண்டிய சேவை. மகிழ்ச்சியோடு வாழுங்கள்.
