கனவுகள் எப்படி உருவாகின்றன.?

ஞானகுரு கவுன்சிலிங்

கனவுகள் எல்லாமே அர்த்தமுள்ள குறியீடுகள் என்று உலகில் உள்ள அத்தனை மதங்களும் அழுத்தமாகச் சொல்கின்றன. ஆனால், மருத்துவ ஆய்வாளர்கள், சரியாகத் தூங்காத மூளையே கனவு காண்கிறது. தூக்கத்தில் கண்கள் அசைவை வைத்து, எந்தெந்த நேரம், எப்படிப்பட்ட கனவு வருகிறது என்பதை அறிய முடியும் என்கிறார்கள்.  

ஒரு கனவுக்குப் பிறகு விழிப்பு வருவதுண்டு. அதன் பின்னர் தூங்கும்போது  முதல் கனவே  நிறைய பேருக்கு தொடர்வதுண்டு. இதை கன்டினியூவல் ஆக்டிவேஷன் என்கிறார்கள். மனதில் எப்படிப்பட்ட உணர்வுகள் அதிகம் உள்ளதோ, அதுவே தீவிரமாக கனவில் வெளிவரலாம். கடவுள், கோயில், பூஜை என்று கனவு காண்பதும் நடிகை, நடிகர்களுடன் பாலியல் கனவு வருவதற்கும் இதுவே அடிப்படைக் காரணம் என்று உளவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

கருவில் இருக்கும் சிசுவும் கனவு காண்கிறது என்பது மருத்துவ ஆய்வுகளின் முடிவு. குட்டிக் குழந்தைகளும் கனவு காண்கின்றன. அதனாலே சில பிள்ளைகள் தூக்கத்தில் வீறிட்டு அழுவதுண்டு.

சூழ்நிலைகளும் கனவு உருவாக்குவதுண்டு. போலீஸ் சைரன் ஒலி, தீயணைப்பு வாகனத்தின் ஓசை போன்றவை அதற்குத் தொடர்பான கனவுகளை உருவாக்குவதுண்டு. காலையில் திருட்டு, தீவிபத்து போன்ற சம்பவங்களைக் கேள்விப்படுகையில் கனவு பலிக்கிறது என்று சொல்லத் தொடங்குகிறார்கள். இவை எல்லாமே தற்செயல் நிகழ்வுகள் மட்டுமே.

ஆழ்ந்த தூக்கம் இல்லாதவர்களுக்கே அதிக கனவுகள் வருகின்றன. உடல் பருமன், மூச்சு பிரச்னை, மது அடிமைகள் அதிகம் கனவு காண்கிறார்கள். எனவே, கனவு என்பது ஒரு வகையில் கழிவு வெளியேற்றம் என்று எடுத்துக்கொள்ளலாம். இதனால் மனதில் இருக்கும் தேவையில்லாத எண்ணங்கள் வெளியேறி நிம்மதி நிறைய பேருக்குக் கிடைக்கிறது.

Leave a Comment