நிஜமான புரட்சி எழுத்தாளர் இவர் தான்.

மார்ச் 28 – மாக்சிம் கார்க்கி பிறந்த தினம்

அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் என்றால் யாரென்று தெரியுமா?

நிச்சயம் தெரியாது. அதுவே மாக்சிம் கார்க்கி என்றால் புரியும். ஆம், மாக்சிம் கார்க்கியின் இயற்பெயர்தான் அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ்.

மாக்சிம் கார்க்கி 1868-ஆம் ஆண்டு ரஷ்யாவில் பிறந்தார். அவருடைய சிறு வயது மிகுந்த துயரங்களாலும் வறுமையாலும் நிரம்பியது. சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த அவர், தாத்தா-பாட்டியிடம் வளர்ந்தார். குழந்தை பருவத்தில் கல்வி முறையாகக் கிடைக்கவில்லை; அதற்கு பதிலாக வாழ்க்கையே அவருக்கு ஆசிரியராக இருந்தது.

அவர் பல்வேறு வேலைகளைச் செய்தார். கப்பலில் வேலை, பேக்கரி, தச்சு வேலை போன்றவை. இந்த அனுபவங்கள் பின்னர் அவரது படைப்புகளில் ஆழமான நிஜவாத உணர்வை உருவாக்கின.

மாக்சிம் கார்க்கி தனது எழுத்து வாழ்க்கையை குறுநாவல்கள் மற்றும் சிறுகதைகள் மூலம் தொடங்கினார். அவரது படைப்புகளில் தொழிலாளர் வர்க்கம், ஏழைகள், சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்கள் ஆகியோரின் வாழ்க்கை பிரதிபலிக்கிறது.

தாய் இவரது பெயரை உலகம் முழுவதும் கொண்டுபோய் சேர்த்தது. அதேபோல், மை சைல்ட்குட், த லோயர் டெப்த்ஸ், இன் த வோர்ல்டு, மை யுனிவர்சிட்டீஸ் போன்றவையும் இவரது குறிப்பிடத்தக்க படைப்புகள்.

தாய் நாவல் ரஷ்ய புரட்சிக்கான சிந்தனையை ஊக்குவித்த முக்கிய படைப்பாக கருதப்படுகிறது. தொழிலாளர் இயக்கம் மற்றும் சமூக நீதியை வலியுறுத்தும் இந்த நாவல் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

சமூக மற்றும் அரசியல் சிந்தனைகள்

மாக்சிம் கார்க்கி, சமூகநீதியையும் மனித கண்ணியத்தையும் வலியுறுத்தியவர். அவர் ரஷ்யப் புரட்சியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். விளாதிமிர் லெனினுடன் அவருக்கு நட்பு இருந்தது.

அவரது எழுத்துகள் “சோஷலிஸ்ட் ரியலிசம்” (Socialist Realism) எனப்படும் இலக்கியப் போக்கின் அடித்தளமாக அமைந்தன. சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த எழுத்தை ஒரு கருவியாக பயன்படுத்தியவர் அவர்.

மாக்சிம் கார்க்கியின் எழுத்து பாணி மிகவும் நேர்மையானதும் உணர்ச்சி நிரம்பியதும் ஆகும். அவர் கதாபாத்திரங்களை வாழ்வின் உண்மைகளை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கினார்.

வறுமை மற்றும் அநீதி, மனித உறவுகள், போராட்ட மனப்பாங்கு, சமூக மாற்றம் போன்றவைகளை அவரது எழுத்துகள் ஆய்வு செய்கின்றன. இவற்றை ஆழமாக ஆராய்கின்றன. அதனால் மாக்சிம் கார்க்கி உலக இலக்கியத்தில் ஒரு புரட்சிகர எழுத்தாளராக கருதப்படுகிறார். அவர் எழுதியவை வெறும் கதைகள் அல்ல; அவை சமூகத்தின் குரலாகவும் மாற்றத்திற்கான அழைப்பாகவும் இருந்தன.

இன்றும் அவரது படைப்புகள் பல மொழிகளில் படிக்கப்படுகின்றன. அவர் மனித வாழ்க்கையின் உண்மைகளை வெளிப்படுத்திய விதம், பல தலைமுறைகளுக்கு சிந்தனையைத் தூண்டியுள்ளது.

உலகத்திலேயே அதிகம் படிக்கப்பட்ட புரட்சி நாவல் என்று கருதப்படுகிறது இவரது தாய். எழுத்தாளர், கவிஞர், அரசியல்வாதி என பன்முகத் திறமை கொண்டவர். எழுத்தைப் போல் வாழ்ந்து காட்டியவர். மக்களுக்காகப் போராடி சிறைக்குப் போனவர்.

வாழ்க்கை அமைப்பில் உள்ள குறைபாட்டினால்தான் மக்கள் குற்றவாளி ஆகிறார்கள் என்று சொன்னவர். மேலும், ‘இங்கு கைதிகளும் இல்லை, நீதிபதிகளும் இல்லை. பிடித்தவர்களும் பிடிபட்டவர்களும்தான் இருக்கிறார்கள்’ என்று சொன்னவர். ரஷ்ய எழுச்சிக்கு முக்கிய காரணகர்த்தாக்களில் ஒருவராக கருதப்படும் மாக்சிம் கார்க்கிதான், இன்று எத்தனையோ எழுத்தாளர்களின் ஆதர்ச நாயகன்.

Leave a Comment