வெயிலை விரட்டுங்கள்
அடேங்கப்பா என்னா சுவை. நன்னாரி வேர் சுவை மட்டும் தருவது இல்லை, அதில் பல்வேறு மருத்துவக் குணங்களும் உள்ளன. கோடை காலத்தில் எல்லோரும் பயன்படுத்த வேண்டிய மூலிகை என்றே இதைச் சொல்லலாம். இனிப்பும் சிறு கசப்பும் சேர்ந்திருக்கும் நன்னாரி வேருக்கு குளிர்ச்சித் தன்மை நிரம்பவே உண்டு.
அதனால் வெயில் பாதிப்பினால் உருவாகும் நீர்க்கடுப்பு, மூலச்சூடு போன்றவை குணமாவதற்கு நன்னாரி வேரை குடிநீருக்குள் போட்டுக் குடித்துவந்தாலே போதும். நன்னாரி வேரை தண்ணீரில் போட்டு சுடவைத்து, அந்த நீரைக் குடித்தாலும் நோயினால் ஏற்படும் பிரச்னைகள் தீருவதுடன் இளநரை, பித்த நரை போன்றவையும் நீங்கிவிடும்.
பித்த நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் நன்னாரி வேரை அரைத்து பசும்பாலில் போட்டு குடித்து வரலாம். நன்னாரி போட்டு காய்ச்சி எடுத்த நீரை வடிகட்டி ஆறவைத்து குடித்துவந்தால் உடலுக்கு மினுமினுப்பு வருவதுடன் கோடை காலத்தில் ஏற்படும் வியர்க்குரு, வேனல்கட்டி போன்ற தொந்தரவுகளும் இருக்காது.
