பேரண்டிங் டிப்ஸ்
தூக்கத்தில் இருக்கும் குழந்தையைப் பார்ப்பது பெற்றோருக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும். தூக்கம் ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியம். ஆனால், இப்போது படிப்பும் முக்கியம். அதனால், பள்ளி நாட்களில் அசந்து தூங்கும் பிள்ளையை எப்படி எழுப்புவது என்று தெரியாமல் நிறைய பெற்றோர்கள் தடுமாறுகிறார்கள். பிள்ளை தானே எழுவதற்கு என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.
பிள்ளைகள் தானாகவே எழுந்தரிக்க வேண்டும் என்றால், அவர்கள் தூங்குவதற்குப் போதுமான நேரத்தைக் கொடுக்க வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகளின் வயதைப் பொறுத்து குறைந்தது 8 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரம் வரையிலும் தூங்குவதற்கு அனுமதிக்கலாம். அவர்கள் தூங்கும் நேரத்தைப் பொறுத்தே எழும் நேரம் அமைகிறது. எனவே, எந்த நேரத்தில் குழந்தை தூங்கவேண்டும் என்பதில் தெளிவாகவும் உறுதியாகவும் இருங்கள்.
மென்மையான மசாஜ்
உங்களுக்கு வேலை இருந்தாலும் பிள்ளை தூங்கியதை உறுதிபடுத்திய பிறகே நகருங்கள். பொதுவாக இரவு 10 மணிக்குக் குழந்தையை தூங்குவதற்குப் பழக்கப்படுத்துவது நல்லது. வெள்ளி, சனி, ஞாயிறு, விடுமுறை நாட்களில் லேட்டாகத் தூங்கலாம் என்ற பழக்கத்தை அனுமதிக்காதீர்கள். பகலில் எத்தனை ஜாலியாக இருந்தாலும் படுக்கை நேரம் மாற வேண்டாம்.
குறிப்பிட்ட நேரம் தாண்டியும் குழந்தை தூங்கினால் ஜன்னல், கதவுகளைத் திறந்துவைத்து அறைக்கு வெளிச்சமூட்டுங்கள். மெல்லிய சத்தத்தில் இசையை ஓட விடுங்கள். இதற்குப் பின்னரும் பிள்ளை எழவில்லை என்றால், மென்மையாக மசாஜ் செய்வது போன்று காலில் அழுத்தம் கொடுங்கள்.
கண்ணைத் திறக்க சிரமப்படும் குழந்தையிடம் அன்பாகப் பேசுங்கள். எந்த காரணம் கொண்டும், ‘நேரமாச்சு சனியனே… சீக்கிரம் எழுந்திரு.. ஸ்கூலுக்கு நேரமாச்சு அறிவில்லையா’ என்று கத்தி, கூப்பாடு போட்டு குழந்தையின் காலை நேரத்தை டென்ஷனாக்காதீர்கள். அம்மாவின் கோபத்தைக் கண்டு பதற்றமுடன் எழும் குழந்தையால் படிப்பிலும் நன்கு கவனம் செலுத்த முடியாது. காலை பொழுது நன்றாகத் தொடங்கினால் மட்டுமே, அன்றைய தினம் இன்பமாக இருக்கும். ஆகவே, குழந்தையை எழுப்புவதற்கு சில நிமிடங்கள் ஒதுக்குங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
