ஞானகுரு பதில்கள்
ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.
கேள்வி : உறவுகளுக்கிடையே ஏற்படும் மனக்காயத்தை போக்குவது எப்படி?
- பி.கதிரேசன், ஆம்பூர்
ஞானகுரு :
ரோஜா செடியில் முட்கள் இருப்பது இயல்புதான். அதனால் எந்த உறவையும் அதிகம் நெருங்க வேண்டாம். அதேநேரம், மிகவும் விலகியும் சென்றுவிடாதீர்கள். உங்களுக்கு என ஒரு எல்லை வகுத்துக்கொண்டு பழகத் தெரிந்துகொண்டால், உறவுகளால் எந்த துன்பமும் நிகழாது. சின்னச்சின்ன காயம் ஏற்படுவது சகஜம், அதை கடந்துசெல்ல கற்றுக்கொள்ள வேண்டும்.
…………………..
கேள்வி : பொய்யர்கள், அயோக்கியர்கள் நன்றாக வாழ்வதுபோல் தெரிகிறதே?
- ஜி.குணசீலன், பர்கூர்
ஞானகுரு :
ஒருவர் எப்படி வெளியே தெரிகிறார் என்பது முக்கியமல்ல, அவர் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்கிறார் என்பதே முக்கியம். பொய்யர் அல்லது நல்லவர் என்று யாருக்கும் சான்றிதழ் கொடுக்கும் அளவுக்கு நம்மால் பிறரை அறிந்துகொள்ள முடியாது. ஏனென்றால், நாம் என்ன முடிவு எடுப்போம் என்பதையே நம்மால் சில சமயங்களில் அறிந்துகொள்ள முடியாது.
எனவே அடுத்தவர்கள் வாழ்க்கை குறித்த கவலை நமக்குத் தேவையில்லை. அவரவர் வாழ்க்கையை அவரவர் வழியில் வாழ்கிறார்கள். பிறர் வாழ்க்கையைப் பார்த்து உங்கள் வழியை மாற்றிக்கொள்ள நினைக்காதீர்கள், தொலைந்துபோவீர்கள்.
