தோல்விகள் கசக்கலாம் ஆனால் நல்ல அனுபவம் தரும்

அனுபவி ராஜா அனுபவி

இன்று சின்னச்சின்ன விஷயங்களுக்கு எல்லாம் உயிரை இழப்பவர்கள் அதிகரித்துவிட்டார்கள். பரிட்சையில் மதிப்பெண் குறைந்துவிட்டதா… தற்கொலை. காதலில் தோல்வியா… தற்கொலை. புருஷனிடம் சண்டையா… தற்கொலை. வாங்கிய கடனைக் குடுக்க முடியவில்லையா… தற்கொலை. இவர்கள் உயிர் என்பதை எத்தனை துச்சமாக நினைக்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்தால் வருத்தமாக இருக்கிறது.

இந்த உடலில் உயிர் இருக்கப்போவது ஒரு முறை. இந்த உடலையும் உயிரையும் பெற்றோரும் மற்றோரும் எப்படியெல்லாம் பாராட்டிச் சீராட்டி வளர்த்து இருப்பார்கள். யாரைப் பற்றியும் யோசிக்காமல் தனக்கு நேர்ந்த சின்னப் பிரச்னையை மட்டுமே பெரிதாக எடுத்துக்கொள்வதால்தான், துச்சமாக நினைத்து தங்கள் உயிரை இழக்கிறார்கள். இது, இளையதலைமுறையினரிடம் போராடும் குணம் குறைவதைத்தான் காட்டுகிறது.

தோல்வியை அடையாதவர்களால் இந்த உலகில் வெற்றியை அனுபவிக்கவே முடியாது என்பதை உணராதவர்கள்தான் சின்ன விஷயங்களையும் தாங்கமுடியாதவர்களாக இருக்கிறார்கள்.

சுற்றும் வரை பூமி

சுடும் வரை நெருப்பு

போராடும் வரை மனிதன் – என்ற கவிதையை மனிதர்கள் மறந்துவிடக் கூடாது. ஒவ்வொரு தோல்வியையும் அனுபவமாகப் பார்க்கவேண்டுமே தவிர, வாழ்க்கையே முடிந்துவிட்டதாக எண்ணக்கூடாது.

விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனின் ஆய்வுக்கூடம் திடீரென தீப்பற்றிக் கொண்டது. அவரது ஆய்வுகள் அடங்கிய அத்தனை ஆவணங்களும் ஆய்வுக்கூடத்தில்தான் இருந்தன. அந்தத் தீயைப் பார்த்த எடிசன் என்ன சொன்னார் தெரியுமா?

‘என்னுடைய 24 ஆண்டு கால தவறுகள் தீயில் எரிகின்றன’ என்று சொன்னார். அதுதான் தன்னம்பிக்கை. அதுபோன்ற தன்னம்பிக்கையை மனிதர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, சின்னச்சின்ன விஷயங்களுக்கு எல்லாம் உயிரை விடுகிறேன் என்று யோசிக்கவும் கூடாது.

மனிதர்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு தோல்வியையும் ஒரு கசப்பு மருந்து போன்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். மருந்துகள் எல்லாம் கசக்கத்தான் செய்யும். ஆனால், அது கொடுக்கும் பலன் சிறப்பாக இருக்கும்… நோயைக் குணப்படுத்தும். அப்படித்தான் தோல்விகள் கசக்கத்தான் செய்யும். ஆனால், தோல்வியில் இருந்து கிடக்கும் அனுபவம் மிகவும் மனம் கனிந்ததாக இருக்கும்.

எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வல்ல என்பதை பள்ளியில் இருந்தே மாணவர்களுக்குப் பயிற்றுவிக்க வேண்டும். தற்கொலை செய்வதற்கு அளப்பரிய தைரியம் வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், அது உண்மையல்ல. தற்கொலை என்பது கோழைகள் எடுக்கும் கோழைத்தனமான முடிவு. ஏனென்றால் தற்கொலையைப் பற்றி சிந்தித்தவுடன் அவர்கள் அறிவு வேலை செய்வதை நிறுத்திக்கொள்கிறது.

தற்கொலை முயற்சியைக் குற்றம் என்கிறது நமது சட்டம். தற்கொலை முயற்சி மேற்கொண்டு, மரணத்தில் இருந்து தப்பிப்பவர்களுக்குத் தேவை உடனே மன நல ஆலோசனையே தவிர, தண்டனை அல்ல. அவர்களுக்கு அன்பைப் புரிய வைக்கவேண்டும்… வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். உயிரின் அருமையை அறியும்வண்ணம் செய்யவேண்டும்.

Leave a Comment