கல்யாணம் ஆனாலும் காதலைச் சொல்லுங்கள்!

உறவுக்குள் உரசல்கள்

ஒரு காலத்தில் காதல் செய்து திருமணம் முடித்தவர்களாக இருப்பார்கள். கால ஓட்டத்தில் கணவன் வேலை… வேலை என்று மாறி இருப்பார். மனைவியும் ஏதாவது ஒரு செயலை இழுத்துப்போட்டு செய்பவராக இருப்பார். அதனால் இருவரும் அன்பாகப் பேசிக்கொள்வதுகூட குறைந்துபோய் இருக்கும். அதனால் ஒருவர் மீது ஒருவருக்கான கவர்ச்சியும் அன்பும் குறைந்துபோய், கடமைக்காக கணவன் மனைவியாக வாழ்கிறார்கள்.

ஏதோ ஒன்றை இழந்துவிட்டதாக நினைக்கிறார்கள். உண்மை என்ன தெரியுமா..? அவர்கள் தங்களுக்குள் காதல் இருப்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்ளவே இல்லை என்பதுதான்.

காதலைச் சொல்லுங்கள்

திருமணத்திற்குப் பிறகும் காதலை சொல்ல வேண்டுமா..? தான் உழைப்பது எல்லாமே மனைவிக்கும் குழந்தைக்கும்தானே என்று ஆண்கள் இந்தச் செயலுக்கு நியாயம் கற்பிப்பார்கள். அதேபோன்று பெண்களும், நான் 24 மணி நேரமும் இந்தக் குடும்பத்துக்காகத்தானே உழைக்கிறேன். அவருடன் தினமும் பேசுவதற்கு அப்படி என்னதான் இருக்கிறது என்பார்கள்.

இந்த மாதிரியான சுவாரஸ்யம் இல்லாத உறவுதான் விபரீதமாக முடிந்துவிடும். அதனால் கணவன், மனைவி இருவரும் அன்றன்று பூத்த மலர்களைப் போன்று சிரித்துப்பேசி தினமும் பழகவேண்டும். தங்கள் காதலையும் அன்பையும் ஒருவருக்கு ஒருவர் புரியும் வகையில் பரிமாறிக்கொள்ள வேண்டும்.

பாராட்டு அவசியம்

தன்னுடைய மனைவிதானே… இவளை எதற்குப் பாராட்ட வேண்டும் என்று கணவரும், கணவரை எதற்குக் கொண்டாடவேண்டும் என்று மனைவியும் நினைத்துவிட்டால், அந்த உறவு சலிப்பாகி விடும். உறவுக்குள் சலிப்பு வந்துவிட்டால், தன்னுடைய மனைவியைவிட, அடுத்த வீட்டுப் பெண் அழகாக இருப்பதாக கணவனுக்குத் தோன்றும். அதேபோன்று மற்ற ஆண்கள் எல்லாம் மனைவியை நன்றாக கவனிப்பவராகவும், தான் மட்டும் ஏமாந்துவிட்டதாகத் தோன்றும்.

கணவன், மனைவியும் வாழ்க்கையை ரசித்து வாழவில்லை என்றால் என்ன ஆகும் என்பதை இந்த நகைச்சுவை மூலம் அறிந்துகொள்ளலாம்.

வித்தியாசமான போட்டி

வெளிநாடுகளில் ஒரு வித்தியாசமான விளையாட்டுப் போட்டி நடத்துவார்கள். அதாவது, தனது மனைவியை கணவன் முதுகில் சுமந்துகொண்டு ஒரு கிலோமீட்டர் வரையிலும் ஓடவேண்டும். அவர்களுக்குத் தடை ஏற்படுத்தும் வண்ணம் பல்வேறு இடைஞ்சல்கள் இருக்கும்.

முதுகில் இருக்கும் மனைவியை கீழே இறக்கிவிடாமல்… அனைத்துத் தடைகளையும் தாண்டுபவர்களே வெற்றி பெற்றவர் ஆவார். கணவன், மனைவி இருவருக்கும் நெருக்கம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பந்தயத்தை நடத்துகிறார்கள். தன்னைச் சுமந்துகொண்டு கணவன் ஓடுவதை மிகவும் பெருமையாகவே அனைத்துப் பெண்களும் நினைக்கிறார்கள்.

ஒரு முறை இந்தப் போட்டியில் விசித்திரம் நடந்தது. அதாவது ஒரு கணவன் மனைவியைத் தூக்கிக்கொண்டு… இதுவரை யாருமே ஓடாத அளவுக்கு வேகமாக ஓடிச்சென்று முதல் இடத்தைப் பிடித்தான். அனைவருக்குமே ஆச்சர்யம். அவரைச் சுற்றுக்கொண்டு வெற்றிக்கான காரணத்தைக் கேட்டார்கள்.

அடுத்தவர் மீது ஆசை

வெற்றிக்குக் காரணமாக முதுகில் இருந்த பெண்ணை சுட்டிக்காட்டினார்.

‘அடேங்கப்பா… மனைவி மீது அத்தனை ஆசையா? எத்தனை அன்பாகப் பிடித்துக்கொண்டு ஓடினீர்கள்?’ என்று கேட்டார்கள்.

‘இவள் மனைவிதான். ஆனால் எனக்கு அல்ல… பக்கத்து வீட்டுக்காரனுக்கு’ என்று சொன்னாராம். இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்பார்களே அது, இதுதான்.

ஆம், காதலைச் சொல்லாமல் அன்பைப் பரிமாறிக்கொள்ளாமல் கடமைக்காக வாழ்ந்துவந்தால், இந்த நிலைமைதான் ஏற்படும். மனைவி ஆசையாக செய்துதரும் உணவை சாப்பிடுவது மட்டும் போதாது… அது எத்தனை ருசியாக இருந்தது என்பதைத் தினமும் பாராட்டத்தான் வேண்டும். அதேபோன்று கணவரின் பேச்சு, செயல்பாடுகளை மனைவியும் பாராட்ட வேண்டும்.

இரைக்கும் கிணறுதான் தண்ணீர் கொடுத்துக்கொண்டே இருக்கும். இரைக்கவில்லை என்றால், தண்ணீர் முழுவதும் பாசி படர்ந்து அந்தக் கிணறு கெட்டுப்போய்விடும். இது கிணற்றுக்கு மட்டுமல்ல… குடும்ப வாழ்வுக்கும்தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

Leave a Comment