வைரமுத்துக்கு ஞானபீட தகுதி இருக்கிறதா..?

ஞானகுரு பதில்கள்

கேள்வி : சினிமா பாடல் எழுதும் வைரமுத்துக்கு ஞானபீட விருது கொடுப்பது சரிதானா..?

  • என்.கரிகாலன், தஞ்சாவூர்

ஞானகுரு :

இந்தியாவில் இலக்கியத்திற்கு வழங்கப்படும் மிக உயரிய ஞானபீட விருது கவிஞர் வைரமுத்துக்குக் கிடைத்திருக்கிறது. அகிலன், ஜெயகாந்தனை அடுத்து 24 ஆண்டுகளுக்குப் பிறகு வைரமுத்துக்கு ஞானபீட விருது கிடைத்திருப்பதை பாராட்டாமல் நிறைய பேர் எதிர்க்கிறார்கள். மூன்று குற்றச்சாட்டுகள் சொல்கிறார்கள்.

பாலியல்

முதலாவது, வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு. பாடகி சினிமயி தொடங்கி 17 பெண்கள் குற்றம் சாட்டியிருப்பதால், தனிமனித ஒழுக்கம் இல்லாதவருக்கு விருது கொடுத்தது தவறு என்கிறார்கள்.

பணம்

இரண்டாவது, வைரமுத்து இந்த விருதை பணம் கொடுத்தும், தன்னுடைய செல்வாக்கினாலும் வாங்கிவிட்டார் என்கிறார்கள்.

தகுதி

மூன்றாவது, வைரமுத்துவின் படைப்புகளைக் கொண்டு தமிழின் தகுதியை வெளிநாட்டவர்கள் குறைத்து மதிப்பிடுவார்கள் என்கிறார்கள்.

தனிமனித ஒழுக்கத்தை வைத்து படைப்பை பரிசீலனை செய்வது என்றால், திருடனாக இருந்த வால்மீகி எழுதிய ராமாயணத்தை தடை செய்ய வேண்டியிருக்கும். எனவே, வைரமுத்து மீதான குற்றச்சாட்டுகள் சட்டரீதியாக தீர்க்கப்பட வேண்டியவை மட்டுமே.

பணம், செல்வாக்கினால் இந்த விருது வாங்கமுடியும் என்றால் இது வைரமுத்துக்கு அவமானம் இல்லை, அந்த விருதுக்கு அவமானம். அப்படிப்பட்ட விருதுக்கு எந்த மதிப்பும் கிடையாது.

வைரமுத்துவின் படைப்புகளைக் கொண்டு வெளிநாட்டவர்கள் தமிழின் தகுதியை மதிப்பார்கள் என்று சொல்வது ஏற்க முடியாதது. இரண்டாயிரம் ஆண்டுக்கும் பழைமையான தமிழின் தரத்தை ஒரு படைப்பை வைத்து யாரும் எடை போட மாட்டார்கள்.

எனவே, வைரமுத்துவைப் பாராட்டுவோம். வைரமுத்துவின் படைப்புகள் காலத்தை வென்றவை. எனவே வைரமுத்து அடுத்து நோபல் பரிசு பெறட்டும். அப்போதுதான் தமிழ் படைப்புகளை மற்றவர்கள் தேடிப்பிடித்துப் படிப்பார்கள். மொழி என்பது தனிமனிதப் புகழ்ச்சியைத் தாண்டியது.

Leave a Comment