புத்தர் போன்று வாழ ஆசை…?

ஞானகுரு பதில்கள்

ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.

கேள்வி : புத்தரைப் போன்று ஆசைகளைத் துறந்து வாழ முடியுமா?

  • வி.ராஜரத்தினம், காரைக்குடி

ஞானகுரு :

புத்தனைப் போன்று வாழ ஆசைப்பட வேண்டாம். ஏனென்றால், இளவரசன் போன்று வாழ்ந்து, அழகான மனைவி, பிள்ளை, அதிகாரம் போன்றவைகளை விட்டுத்தள்ளும் நெஞ்சுரம் மானிடருக்குக் கிடைப்பது அரிதிலும் அரிது.

ஆனால், புத்தர் இந்த உலகம் மீது காட்டியது போன்ற அன்பைக் காட்ட முடியும். அவர் தேடி அலைந்து பெற்றுக்கொண்ட ஞானத்தின் பலனை அனுபவியுங்கள். ஒவ்வொரு மனிதரையும் புத்தரைப் போன்று எண்ணி மதிப்பு கொடுங்கள். அதுதான் புத்தர் போன்று வாழும் வாழ்வு.  

……………

கேள்வி : நாம் சேர்க்கும் சொத்து பிள்ளைகளுக்கு உதவுமா?

  • பாலசுப்பிரமணியன், குன்னூர்

ஞானகுரு :

தனக்காக அப்பா நிறைய செய்யவேண்டும் என்று ஒவ்வொரு மகனும் எதிர்பார்க்கிறான். அவனே தந்தையானதும் மகனுக்கு நிறைய நிறைய செய்கிறான். ஆனால் எந்தப் பிள்ளையும் தகப்பன் தனக்கு நிறைய செய்திருக்கிறான் என்று ஒப்புக்கொள்வதில்லை. அதனால் உங்கள் வாழ்க்கையை மட்டும் பார்த்தால் போதும்.

படிப்பு, பண்பு மட்டும் கொடுப்பதே போதும். நீங்கள் சேமித்த சொத்துக்களை நீங்கள் நன்றாக அனுபவியுங்கள். பிள்ளைக்குத் தேவையானதை அவரே சம்பாதித்துக் கொள்ளட்டும்.  

Leave a Comment