காலாட்டியபடி சாப்பிட ஆசையா?

காஞ்சிபுரத்தின் கதை

காஞ்சிபுரம் போனால் காலாட்டிக்கிட்டே சாப்பிடலாம் என்று ஒரு சொலவடை உண்டு. இதை நம்பி  ஒரு சோம்பேறி காஞ்சிபுரம் போயிட்டான். அங்கே போய் ஊருக்கு நடுவுல இருந்த ஒரு மடத்துல போய் உட்கார்ந்தான். யாராவது சாப்பாடு குடுப்பாங்கன்னு பார்த்துக்கிட்டே இருந்தான். ஒண்ணும் வர்ற மாதிரி தெரியலை.

காலை ஆட்டுனாத்தான் சாப்பாடு கொடுப்பாங்க போலன்னு நினைச்சு வேகமா கால் ஆட்டிக்கிட்டேஇருந்தான். கால் ஆட்டியாட்டி வலியே வந்திடுச்சு.

அந்தப் பக்கம் வந்த ஒருவரிடம், ‘காஞ்சிபுரம் போனா காலாட்டிக்கிட்டே சாப்பிடலாம்’ சொன்னதை நம்பி வந்து கால் ஆட்டுறேன். யாருமே சாப்பாடு போடலையேன்னு கேட்டாராம்.

உடனே அவர், ‘மண்டு, காஞ்சிபுரத்துல கைத்தறி நெசவு அதிகமா நடக்குது.  தறியில் வேலைக்குச் சேர்ந்து கால்களை இப்படியும் அப்படியும் ஆட்டி, நெசவுத் தொழில் செய்தால் நல்லபடியாக சாப்பிடலாம்’ என்று சொன்னாராம்.

இதுதான் காஞ்சிபுரத்துல போய் காலாட்டி சாப்புடும் ரகசியம்.

உழைப்பவருக்கு எல்லா இடத்திலும் உணவு உண்டு. அந்தக் காலத்தில் சொன்னவை இன்றும் அர்த்தம் உள்ளவை.

Leave a Comment