ஞானகுரு தரிசனம்
ஏழை, பணக்காரர் என்று பேதம் இல்லாமல் எல்லா மனிதர்களிடமும் அவரவர் சக்திக்கு ஏற்ப கொஞ்சமாவது பணம், உறவு இருக்கிறது. இந்த இரண்டு சொத்துக்களை ஒட்டுமொத்தமாகக் காலி செய்யும் மூன்று எதிரிகள் இருக்கிறார்கள்.
மூன்று எதிரிகள் என்று சொல்வதை மூன்று பழக்கம் என்று கிளியராகச் சொல்லலாம். அதாவது, ஒருபோதும் அலுக்கவும் சலிக்கவும் செய்யாத மூன்று பழக்கங்கள் மனிதருடன் விடாப்பிடியாக ஒட்டிக் கொண்டிருக்கின்றன.
இந்த பழக்கங்கள் மனிதரை அடிமையாக மாற்றி, அவர்களுக்கு போலியான சந்தோஷம் தருகின்றன. நிறைய மகிழ்ச்சி கிடைப்பதால் இந்த பழக்கங்களை மனிதர்கள் ஆர்வமுடன் நேசிக்கிறார்கள். இந்த பழக்கங்களின் மாயப்பிடியில் இருந்து தப்பித்து வெளிவர மனிதர்கள் விரும்புவதே இல்லை.
மனிதரின் முதல் எதிரி
ருசியாக சாப்பிடுவது மனிதருக்கு ரொம்ப ரொம்பவும் பிடித்த பழக்கம். ருசியான உணவு மகிழ்ச்சி தருகிறது. இந்த ருசியே மனிதரின் முதல் எதிரி.
ஏனென்றால், வயிறு என்பது மனிதரின் இரண்டாவது மூளை. மனிதரின் ஆரோக்கியத்திற்காக உழைக்கிறது. அதேநேரம், அளவுக்கு அதிகமாக உணவு கிடைக்கும்போது, அதை தனியே சேமித்து வைக்கத் தெரியாது. அதேபோல் ஒரு வேளை உணவு இல்லை என்றாலும் பொறுத்துக்கொள்ளவும் செய்யாது. எப்போதும் இயங்கிக்கொண்டு இருப்பது வயிற்றின் இயல்பான செயல்பாடு. இதனை புரிந்துகொண்டு அவ்வப்போது கொஞ்சம் உணவு கொடுப்பது மட்டுமே சரியான செயல்.
பசியோடு இருப்பது உடலுக்கு ஆபத்து என்பது போன்று அதிகம் சாப்பிடுவது அதைவிட ஆபத்து. இது தெரியாமல் வயிறு நிறைய சாப்பிட வேண்டும் என்று அம்மாக்கள் சின்ன வயதிலிருந்தே திணித்து திணித்து வளர்க்கிறார்கள். அதனால் கல்யாண வீடு, ஹோட்டல் சாப்பாடு என்றால் மூக்கு முட்ட சாப்பிடுகிறார்கள்.. உணவே மருந்து என்று வாழாமல் உணவே விருந்து என்ற உணவுப் பழக்கமே மனிதருக்கு பெரும் எதிரியாகிறது.
மனிதரின் இரண்டாவது எதிரி
ருசியைப் போலவே தூக்கமும் சுகமானது. எந்த செலவும் கிடைக்காமல் இலவசமாகக் கிடைக்கும் இன்பம் தூக்கம். தூக்கத்தைக் குறைப்பது எத்தனை ஆபத்தோ, அதே போன்று ஆபத்து அதீத தூக்கம்.
பள்ளி தொடங்கி அலுவலகம் வரை லேட்டாக வருபவர்களிடம் காரணம் கேளுங்கள். காலையில் தாமதமாக கண் விழித்தேன் என்பார்கள். நீண்ட நேரம் தூங்குவதை நிறைய பேர் விரும்புகிறார்கள்.
காலையில் கண் விழித்து எழுந்தபிறகும் மீண்டும் ஒரு தூக்கம் போடுவது நிறைய பேருக்கு பழக்கமாகிவிட்டது. தூங்கத்தூங்க இனிக்குதடா என்று வாழ்க்கையை தூங்கியே அனுபவிக்கிறார்கள். தூக்கம் மிகவும் நல்லது. அதுவே, அளவுக்கு மிஞ்சும்போது ஆபத்தாக மாறுகிறது.
மனிதரின் மூன்றாவது எதிரி
ருசி, தூக்கம் போலவே மனிதருக்கு இன்பம் தரக்கூடியது காமம். இந்த காமத்தை இலக்கியத்தில் சிற்றின்பம் என்பார்கள். ஏனென்றால் கொஞ்சநேரம் மட்டுமே இன்பம் கொடுக்கக்கூடியது. அதேநேரம் மீண்டும் மீண்டும் ஆர்வத்தையும் ஆசையையும் தூண்டிக்கொண்டே இருக்கும்.
உலகில் உள்ள அத்தனை ஆணிடமும் பெண்ணிடமும் ஒரே மாதிரியான இன்பமே கிடைக்கும் என்றாலும், வெவ்வேறு நபரிடம் இன்பம் பெறுவதற்கு மனிதர்கள் ஆசைப்படுகிறார்கள். ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் அனுபவிக்க ஆசைப்படுகிறார்கள். எத்தனை முறை சாப்பிட்டாலும் மீண்டும் சாப்பிடுவதற்கு யாரும் சலிப்பதில்லை. அதேபோல் எத்தனை முறை பாலியல் இன்பம் அனுபவித்தாலும் மீண்டும் மீண்டும் உடல் இன்பம் தேடி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஆக, அதீத உணவு, நீண்ட தூக்கம், அதிக காமம் ஆகிய மூன்றும் மனிதருக்கு இன்பம் தருகின்றன. அதேநேரத்தில் மனிதரை நோயாளியாக, சோம்பேறியாக, முட்டாளாக மாற்றிவிடுகின்றன.
வயிறு நிறைய உணவு இருக்கும்போது தூக்கம் வருமே தவிர, உழைப்பதற்கும் சிந்திப்பதற்கும் மனம் வராது. அதேநேரம், உடல் ஆசைக்கு மட்டும் தூண்டில் போடுவார்கள். இதனால் இவர்களுடைய எண்ணம், சிந்தனை எல்லாம் மீண்டும் மீண்டும் இந்த மூன்றை நோக்கி மட்டுமே இருக்கும்.
நிறைய உணவு சாப்பிடும் மீன் வயிறு வீங்கி செத்துப்போவதைப் போல், மனிதர்களும் நிறைய சாப்பிட்டு உடல் நிறைய நோய்களை வரவழைக்கிறார்கள். உடல் நலம் கெட்டுப் போகிறது. அதிக நேரம் தூக்கத்தை விரும்பும் மனிதருக்கு சிந்திக்கும் எண்ணமும் திறனும் குறைகிறது. எனவே, பணமும், சேமிப்பும் காலியாகிறது. உடல் பசியைக் கட்டுப்படுத்தத் தெரியாதவருடன் உறவுகள் என்று யாரும் இருப்பதில்லை.
எனவே, இந்த மூன்றிலும் கவனம் செலுத்துபவர்கள் வாழ்நாள் முழுக்க ஏழையாகவே இருக்கிறார்கள். இவை எல்லாமே தடைக் கற்கள் என்று உணர்ந்தவர்களுக்கு மட்டுமே ஆரோக்கியம், பணம் மற்றும் உறவுகள் கிடைக்கும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
