பாவம், புண்ணியம் மனிதரைப் பாதிக்குமா?

ஞானகுரு பதில்கள்

ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.

கேள்வி : பாவம், புண்ணியம் எல்லாம் உண்மையா, மனிதரை பாதிக்குமா?

  • பி.கணபதி, மகாபலிபுரம்.

ஞானகுரு :

மனசாட்சி இருப்பவர்கள் பாவம், புண்ணியம் என்று யோசிக்கிறார்கள். மனிதன் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை உண்டு என்பதே இதன் அடிப்படைத் தத்துவம்.  

பிறருக்கு நன்மை செய்தால் புண்ணியமும் பிறரை காயப்படுத்தினால் பாவமும் கிடைக்கும் என்று மதங்கள் போதிக்கின்றன. இந்த பலன் உடனடியாகத் தெரியவில்லை என்றாலும் கர்ம விதியாக தொடர்ந்து வரும் என்று எச்சரிக்கை செய்கிறது.

உளவியல் ரீதியாக, பொய் சொல்லி, ஏமாற்றி, துரோகம் செய்து வாழ்பவர்களுக்கு உள்ளுக்குள் பயம், குற்ற உணர்வு, மனஅழுத்தம் உருவாகும் என்றும் நல்லது செய்து வாழ்பவர்களுக்கு மனநிம்மதி, தன்னம்பிக்கை, உறவுகளில் மதிப்பு கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள். ஆனால், தொடர்ந்து குற்றம் செய்பவருக்கு எந்த குற்றவுணர்வும் தோன்றுவதில்லை என்பதே உண்மை.

மக்கள் நல்லவராக வாழவேண்டும் என்பதற்காகவும், எளியோரை வலியோர் துன்புறுத்தகூடாது என்பதற்காகவும் பாவம், புண்ணியம் என்று ஒரு வட்டம் வரையப்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும். பாவம், புண்ணியம் என்பதை பயமுறுத்தும் கருவியாகப் பார்க்க வேண்டாம்.
மனிதரின் ஒவ்வொரு செயலும் ஒரு தடத்தை விட்டுச் செல்கிறது. இதன் அடிப்படையிலே உறவு, வெற்றி, அன்பு, அரவணைப்பு நிகழ்கிறது. அதேநேரம், நல்லவருக்கு தீமை நடப்பதும், தீயவருக்கு நன்மை நடப்பதும் இயல்பான ஒன்று. பாவமும், புண்ணியமும் சாலை விதிகள் போன்றவை. சரியாகப் பயன்படுத்துபவர் நிம்மதியாகப் பயணிக்கலாம். ராங் சைடு போவோரும் நல்லபடியாகப் போய்ச் சேரவும் வாய்ப்பு உண்டு. எனவே, நல்லவராக வாழ்வதும் தீயவராக இருப்பதும் அவரவர் விருப்பம்.

Leave a Comment