நான்கு நாட்களுக்கு மேல் சண்டை வேண்டாம்

உறவுக்குள் ஈகோ ஆபத்து

கணவன், மனைவி உறவுக்குள் சண்டை வருவதும் சமாதானம் ஆவதும் சகஜமான விஷயம்தான். ஆனால் பிரிவு ஏற்படுவதற்கு பெரும்பாலும் காரணமாக இருப்பது, இருவரும் வெளிப்படையாக பேசிக்கொள்ளாததுதான். இருவரிடமும் அன்பு இருக்கும், ஆனால் அதைக்கூட வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள்.

வாய்விட்டுப் பேசுங்கள்

ஒரு கணவன், மனைவிக்கு இடையே சண்டை வந்தால் பேசாமல் இருப்பது ஒரு நல்ல யுக்தி. ஆனால், இது அதிகபட்சம் நான்கு நாட்களுக்கு மேல் போகக்கூடாது.  இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் என்ன காரணத்துக்காக சண்டை என்பதே மறந்து போயிருக்கும். ஆகவே, அதன்பிறகு யோசிக்காமல் பேச வேண்டும். அப்படி பேசாமல் ஒரே வீட்டில் தனித்தனியே பிரிந்து வாழ்வதால் இருவருக்கும் எந்தப் பயனும் இல்லை.

யார் தவறு செய்தார்களோ, அவர்கள்தான் மன்னிப்பு கேட்கவேண்டும்… இறங்கிவர வேண்டும் என்று காத்திருக்கத் தேவை இல்லை. ‘நமக்குள் யார் தவறு செய்திருந்தாலும் ஒன்றுதான். இருவரும் ஒருவருக்கு ஒருவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது.

ஈகோ ஆபத்து

எந்த விஷயம் குறித்து நமக்குள் பிரச்னை வந்ததோ… அதனைத் தவிர மற்ற விஷயங்கள் குறித்து நாம் வழக்கம்போலவே பேசிக்கொள்வோம்’ என்று யாராவது ஒருவர் இறங்கிவந்தால்… அவர்கள் வாழ்க்கைப் பயணம் இனிமையாகச் செல்லும்.

ஏனென்றால் நாட்பட்ட பிரிவு இருவரிடமும் ஈகோவை அதிகரித்துவிடும். மிகவும் சாதாரண பிரச்னைக்காக ஏற்பட்ட சண்டையாக இருக்கும். பல நேரங்களில் என்ன காரணத்துக்காக ஏற்பட்ட சண்டை என்பதைக்கூட மறந்துவிடுவார்கள். ஆனால், மன்னிப்பு கேட்கவேண்டும் என்பதற்காக இருவரும் உறுதியாக இருப்பார்கள். ஒரு வருடம்… இரண்டு வருடம் அல்ல 25 வருடங்கள் வரையிலும் கூட பேசாமலே குடும்பம் நடத்தும் தம்பதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படி வாழ்வதால் யாருக்கு என்ன பிரயோஜனம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

உங்கள் குழந்தைக்கு உங்கள் வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டாகத் திகழவேண்டும் என்பதற்காகவாவது தம்பதியர்கள் சண்டை போடாமல் வாழலாமே… வாழ்வது ஒரு முறை. அந்த வாழ்க்கையில் யாரிடமும் சண்டை போடாமல் இனிமையாக வாழ முயல்வோம்.

Leave a Comment