வயசுக்கேற்ற கனவு வருமா..?

உளவியல் உண்மை

கனவில் என்ன வருகிறது, யார் வருவார்கள் என்பதற்கும் வயதுக்கும் ரொம்பவே நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்கிறார்கள் உளவியல் ஆய்வாளர்கள்.

கனவு” என்பது தூக்கத்தில் தோன்றும் காட்சிகள் மட்டுமல்ல; அது மனித மனத்தின் மறைமுக மொழி என்றும் உளவியலாளர்கள் கூறுகிறார்கள். ஒரு குழந்தை காணும் கனவும், ஒரு முதியவர் காணும் கனவும் ஒரே மாதிரி இருக்காது. வயது மாறும்போது மனிதனின் அனுபவம், பயம், ஆசை, நினைவுகள், உடல்நிலை, ஹார்மோன் மாற்றங்கள் என அனைத்தும் மாறுவதால், கனவுகளின் தன்மையும் மாறுகிறது. அதனால் தான் கனவுக்கும் வயதுக்கும் ஆழமான தொடர்பு இருக்கிறது என்று நரம்பியல் மற்றும் உளவியல் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

குழந்தைகள் கனவு

குழந்தைகளில் இருந்து 12 வயது வரையிலான பிள்ளைகளுக்கு கார்ட்டூன் பாத்திரங்களே அடிக்கடி கனவில் வருகின்றன. அதிகம் கதைகள் கேட்பவர்கள் என்றால், கதைகளில் கேட்ட பூதம், பேய் போன்றவை கனவில் வரலாம்.

சிறுவர்கள் காணும் கனவுகள் பெரும்பாலும் கற்பனை நிறைந்ததாக இருக்கும்.
பறப்பது, பேசும் விலங்குகள், கார்ட்டூன் கதாபாத்திரங்கள், மந்திர உலகங்கள் போன்றவை குழந்தைகளின் கனவுகளில் அதிகம் தோன்றும்.

இதற்குக் காரணம், குழந்தைகளின் மூளை இன்னும் உலகைப் புரிந்துகொள்ளும் கட்டத்தில் இருப்பதுதான். அவர்களின் மனதில் பயத்தைவிட ஆச்சரியம் அதிகமாக இருக்கும். அதனால் குழந்தைகளின் கனவுகள் சாகசம் மற்றும் வியப்பை மையமாகக் கொண்டிருக்கும்.

டீன் ஏஜ் கனவுகள்

டீன் ஏஜ் வயதினருக்குப் பெரும்பாலும் அவர்களுக்குப் பிடித்த திரைப்பட நடிகர் அல்லது விளையாட்டு வீரர்கள் வருகிறார்களாம். காதல், டூயட் போன்றவையும் இடம்பெறுகின்றன.

இளையவர்களுக்கு எதிர்கால பயம், வேலை, படிப்பு, தகாத உறவு போன்ற கனவுகள் வருகின்றனவாம். நடுத்தர வயதினருக்கு திருமணம், மரணம், திருவிழா, உறவினர்கள், குடுப்ம்ப பிரச்னைகள், பணம் தொலைதல், நோய், வன்முறை போன்ற கனவுகள் வருகின்றவாம்.

பருவ வயதில் கனவுகள் மிகவும் தீவிரமாக மாறுகின்றன. காதல், தேர்வு, தோல்வி, எதிர்காலம், சமூக அங்கீகாரம் போன்றவை இளம் வயதினரின் கனவுகளில் அதிகம் இடம்பெறும்.

இந்த வயதில் ஹார்மோன் மாற்றங்கள் அதிகமாக இருப்பதால், மனஅழுத்தமும் உணர்ச்சி ஏற்றத் தாழ்வுகளும் அதிகமாக இருக்கும். அதனால் துரத்தப்படுவது, உயரத்திலிருந்து விழுவது, தேர்வுக்கு தாமதமாக செல்வது போன்ற பதட்ட கனவுகள் அதிகரிக்கின்றன.

சில ஆய்வுகள் கூறுவதாவது, பருவ வயதினருக்கு REM Sleep எனப்படும் ஆழமான கனவு நிலை அதிகமாக இருப்பதால், அவர்கள் கனவுகளை தெளிவாக நினைவில் வைத்துக்கொள்ளும் திறனும் அதிகமாக இருக்கும்.

நடுத்தர வயதினர்

30 முதல் 50 வயதுக்குள் உள்ளவர்களின் கனவுகள் பெரும்பாலும் குடும்பம், வேலை, பணம், பாதுகாப்பு, குழந்தைகள் போன்ற வாழ்க்கைச் சுமைகளுடன் தொடர்புடையதாக இருக்கும்.

இந்த வயதில் ஒருவர் அதிக பொறுப்புகளை ஏற்றிருப்பார். அதனால் மனதில் மறைந்து கிடக்கும் கவலைகள் தூக்கத்தில் கனவாக வெளிப்படும்.
சிலருக்கு வேலை இழப்பு, விபத்து, உறவினரை இழப்பது போன்ற பய உணர்வுகள் கனவாக தோன்றலாம்.

முதியவர்கள்

முதியவர்களின் கனவுகளில் பழைய நினைவுகள் அதிகமாக தோன்றும்.
இறந்த உறவினர்கள், குழந்தைப் பருவ வீடு, பள்ளி நாட்கள், பழைய நண்பர்கள் போன்றவை கனவுகளில் மீண்டும் உயிர்பெறும்.

இதற்குக் காரணம், வயது அதிகரிக்கும்போது மனித மூளை கடந்தகால நினைவுகளை அதிகமாக மீட்டெடுக்கத் தொடங்குகிறது. அதனால் “நினைவுகளின் சினிமா” போல கனவுகள் மாறுகின்றன.

முதியவர்களுக்கு கனவுகள் குறைவாக நினைவில் இருப்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. வயது அதிகரிக்கும்போது REM Sleep நேரம் குறைகிறது. அதனால் கனவுகள் வந்தாலும், அவற்றை நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் போகிறது.

கனவுக்கு காரணங்கள்

வயதுக்கு ஏற்ப காரணங்கள் வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மூளையின் வளர்ச்சி மாற்றம், ஹார்மோன் மாற்றங்கள், வாழ்க்கை அனுபவங்கள், மனஅழுத்தம் மற்றும் பொறுப்புகள், தூக்கத்தின் தரம் மற்றும் உடல்நல மாற்றங்கள் காரணமாக கனவுகள் உருவாகின்றன.

அதாவது, மனிதன் எந்த வாழ்க்கை கட்டத்தில் இருக்கிறானோ, அந்தக் கட்டத்தின் மனநிலையே கனவுகளின் வடிவமாக வெளிப்படுகிறது.

நரம்பியல் விஞ்ஞானிகள் கூறுவதாவது, கனவுகள் என்பது மூளை நினைவுகளை ஒழுங்குபடுத்தும் ஒரு செயலாக இருக்கலாம். உளவியல் அறிஞர் Sigmund Freud கனவுகளை “மனதின் மறைக்கப்பட்ட ஆசைகளின் வெளிப்பாடு” என்று கூறினார்.
அதே நேரத்தில் Carl Jung கனவுகள் மனிதனின் ஆழ்மன சின்னங்களாக செயல்படுகின்றன என்று விளக்கினார்.

குழந்தைக்கு அது கற்பனை உலகம். இளைஞனுக்கு அது எதிர்கால அச்சம். நடுத்தர வயதினருக்கு அது பொறுப்பின் பிரதிபலிப்பு.  முதியவர்களுக்கு அது நினைவுகளின் மறுபிறப்பு. அதனால் கனவுகளை சாதாரண இரவு காட்சிகளாக மட்டும் பார்க்க முடியாது. அவை மனித மனத்தின் வரலாற்றைப் பேசும் அமைதியான மொழி.

நிறைய பேர் பாம்பு பற்றி கனவு கண்டிருக்கிறார்கள். இது அவர்களது எதிர்கால பயத்தைத்தான் காட்டுகிறது என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். அதேபோல் அதிகாலையில் காணும் கனவு பலிக்கும் என்பது இதுவரை நிரூப்பிக்கப்படவில்லை.

Leave a Comment