எட்டு உண்மைகள்
வீட்டுக்கு ஒரு பிள்ளை என்ற நிலை உருவாகிவிட்டது. அதனால் தங்களுடைய ஒட்டுமொத்த அன்பு, பாசத்தை பிள்ளை மீது கொட்டுகிறார்கள். தாங்கள் வாழ்வதே பிள்ளைக்காக என்ற மனநிலையில் அதிக செல்லம் கொடுக்கிறார்கள்.
பிள்ளை மீது அன்பு வைப்பதற்கும் செல்லம் கொடுப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. அதிகம் செல்லம் கொடுப்பதால் பிள்ளைகளுக்கு உருவாகும் மோசமான பின்விளைவுகளை மட்டும் கொஞ்சம் பார்க்கலாம்.
- செல்லம் கொடுக்கும் பிள்ளைகள் சோம்பேறியாக வ்ளர்கிறார்கள். நடக்க முடியும் என்றாலும் தூக்கச் சொல்வார்கள். சாப்பிடத் தெரியும் என்றாலும் ஊட்டிவிடச் சொல்வார்கள். ஷூ கழட்டுவதற்கும் ஆள் தேடுவார்கள். இந்த பழக்கம் பாடம் படிப்பதிலும் தொடரும். எனவே, கஷ்டப்பட்டு வெற்றி அடையும் மனப்பான்மையை இந்த குழந்தையை இழந்துவிடுகிறார்கள்.
- தனக்கு பணிவிடை செய்வதற்காகவே அப்பாவும், அம்மாவும் இருக்கிறார்கள் என்ற மனநிலை பிள்ளைக்கு வந்துவிடுகிறது. பெற்றோரின் பாசத்தைப் புரிந்துகொள்ளாமல் அவர்களை ரேபோ போன்று பார்க்கிறார்கள். இதனால் பெற்றோர் மீது மதிப்பு, மரியாதை பிள்ளைக்கு வருவதில்லை.
- என்ன செய்தாலும் பிள்ளையை பெற்றோர் பாராட்டுகிறார்கள், கொண்டாடுகிறார்கள். ஆனால், வெளியுலகில் பாராட்டும் வெற்றியும் கிடைக்கவில்லை என்றதும் அதீத கோபத்துக்கு ஆளாகிறார்கள். பிறருடன் விளையாடுவதையும் போட்டிகளில் பங்கேற்பதையும் தவிர்த்துவிடுகிறார்கள்.
- பிள்ளையின் ஒழுக்கமின்மையை சில பெற்றோர்கள் ரசிக்கிறார்கள். அதாவது வாடா, போடி என்றும் பெற்றோரை மோசமாகத் திட்டுவதையும் ரசித்து சிரிக்கிறார்கள். இது, சமூகத்தில் மோசமான பின்விளைவுகளை உருவாக்கிவிடும்.
- கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்து விடுவதால் பெற்றோரின் கஷ்டம், சிரமங்களை பிள்ளைகள் ஒருபோதும் புரிந்துகொள்ளவே மாட்டார்கள். அதனால் தான் பெற்றோர் உயிருடன் இருக்கும்போதே வீட்டை எனக்கு எழுதிக்கொடு என்று சண்டை போடுகிறார்கள். சிலர் கொலையும் செய்கிறார்கள்.
- பெற்றோரால் வீட்டில் மட்டுமே பாதுகாப்பு கொடுக்க முடியும். பள்ளியில், சமூகத்தில் பிறருடன் போட்டியிட வேண்டும், சவால்களை எதிர்கொள்ள வேண்டும். ஆனால், செல்லமாக வளரும் குழந்தைகளால் சமூகத்தை எதிர்த்துநிற்க முடிவதில்லை. தன்னுடைய தோல்விக்கு பெற்றோரையே காரணம் காட்டுவார்கள்.
- செல்லம் கொடுப்பது ஒரு வகையில் பிள்ளையை பொம்மையாக மாற்றிவிடுகிறது. வெளியே போயிருக்கும் அம்மா திரும்பிவந்து உணவு கொடுத்தால் மட்டுமே சாப்பிடுவார்கள். தாங்களாகவே பிரட் எடுத்து சாப்பிடவும் தெரியாது. இதை பெற்றோர்கள் பெருமையாகப் பேசுவதால் பிள்ளைகள் நல்ல அடிமைகளாகவே வளர்கிறார்கள்.
- செல்லம் கொடுத்து வளர்க்கும் பிள்ளைக்கு திருமண வாழ்க்கை திருப்திகரமாக அமைவதில்லை. விட்டுக்கொடுத்து வாழத் தெரியாது என்பதால் இணையை திருப்திபடுத்த முடியாமல் போகிறது.
எனவே சமைப்பது, துவைப்பது, வீட்டை பராமரிப்பது போன்ற வேலைகளை ஆண் பெண் வித்தியாசமில்லாமல் பிள்ளைகளைப் பழக்கப்படுத்த வேண்டும். கொடுத்தால் மட்டுமே அன்பு திரும்பக் கிடைக்கும் என்ற உண்மையைப் புரிய வைக்க வேண்டும். பிள்ளைகளை தொட்டிச் செடியாக இல்லாமல் மரம் போன்று வளர்வதற்கு வழி காட்டுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
