அடுத்தவர் வேடத்துக்கு ஆசை..?

ஆசிரியர் பார்வை

ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. அவரவர் வாழ்க்கை பலருக்கும் சுவாரஸ்யம் தருவதாக, திருப்திகரமாக இருப்பதில்லை.

அதேநேரம், அடுத்தவரின் வாழ்க்கை பிடித்திருக்கிறது. அதாவது பணக்கார உறவினர், அதிகாரம் படைத்த மேலதிகாரி, புகழ்பெற்ற விளையாட்டு வீரர், எல்லோரும் விரும்பும் சினிமா நடிகர் போன்று நமது வாழ்க்கை மாறினால் சிறப்பாக இருக்கும் என்று ஆசைப்படுகிறார்கள்.

அதாவது, வேறு ஒருவர் வேடத்தை அடைவதுதான் வெற்றி என்று நினைக்கிறார்கள். அந்த வேடம் கிடைக்கவில்லையே என்று வருந்துகிறார்கள்.

இந்த நேரம் அவர்களுக்கு ஒரு உண்மை புரிவதில்லை. அதாவது இதேநேரம், உங்கள் வேடத்துக்கு வேறு ஒருவர் ஆசைப்படுகிறார். உங்கள் வாழ்க்கை கிடைப்பதை லட்சியம் என்று நினைக்கிறார். எனவே, யாருடைய வாழ்க்கையும் மோசமானது இல்லை.

இந்த உண்மை புரியாமல் அடுத்தவர் வேடத்துக்கு ஆசைப்படுவதால், அவரவருக்குக் கிடைத்த வேடத்தை கொண்டாடுவதில்லை. முதலில் அவரவர் வேடத்தை மனப்பூர்வமாக ஏற்க வேண்டும். இந்த வேடத்தை திருப்தியாக அனுபவிக்க வேண்டும். இந்த மகிழ்ச்சியே அடுத்த வேடம் அடைவதற்கு அடிப்படைத் தகுதி.

எட்டாம் வகுப்பு முடிக்காமல் பத்தாம் வகுப்புக்கு ஆசைப்பட முடியாது. எனவே, முதலில் கிடைத்த வாழ்க்கையை அனுபவித்த பிறகு விரும்பும் வாழ்வுக்கு முயற்சிக்க வேண்டும்.

ஒவ்வொரு நபருக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது. அந்த தனித்துவத் திறமையைக் கண்டறிவது முக்கியம். திறமையை மெருகூட்டி, வளர்த்துக்கொண்டு, புதிய பாதையில் நடக்கும் தைரியம் வேண்டும்.

அப்போதுதான், வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறும். புதிய வேடம் கிடைக்கிறதோ இல்லையோ, அதை நோக்கிய பயணமே மகிழ்ச்சியாக இருக்கும். எனவே, முதலில் இன்றைய வாழ்க்கையைக் கொண்டாடுங்கள். இதுவே மகிழ்ச்சி.

எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment