ஸ்ட்ரெஸ் தீர்க்கும் புதிய பயிற்சி
கவலை இல்லாத மனிதர் யாரும் இல்லை. மரணம், நஷ்டம், விபத்து, தோல்வி, அச்சம் என பல்வேறு காரணங்களால் மனிதருக்கு கவலை வருகிறது. பெரும்பாலோர் ஒருசில நாட்களில் இந்த கவலையிலிருந்து விடுபட்டு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிடுகிறார்கள். ஆனால், நிறைய பேர் கவலையை நினைத்து மீண்டும் மீண்டும் கவலைப்பட்டு தீவிர மன அழுத்தத்தில் மாட்டிக் கொள்கிறார்கள்.
கவலையை விரட்டும் வழிகள்
கவலை இல்லாத வாழ்க்கை என்பது கனவிலும் கிடைக்காது. எனவே, கவலை என்பது மனித வாழ்க்கையின் இயல்பான பகுதி. அது அளவுக்கு மீறும்போது மன அமைதியையும், உடல் நலத்தையும், உறவுகளையும் பாதிக்கிறது. கவலையில் இருந்து முழுமையாக தப்பிக்க முடியாது என்றாலும், அதை கட்டுப்படுத்தவும், வெளியேற்றவும் முடியும்.
கவலையை ஏற்றுக்கொள்ளுங்கள்
எனக்கு மட்டும் கவலை வருகிறது, எனக்கு கவலை வரக்கூடாது என்று பலரும் வருந்துகிறார்கள். கவலையைத் தடுப்பது சாத்தியமில்லை என்றாலும் அதை புரிந்துகொள்ள முடியும். கவலை என்பது உண்மையான பிரச்சனையா, அல்லது மனதில் உருவான பயமா? இதை என்னால் கட்டுப்படுத்த முடியுமா என்று கேள்வி கேட்டாலே, கவலையின் உண்மைத்தன்மை தெரிந்துவிடும்.
சில விஷயங்கள் மட்டுமே நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கும். ஒரு சில விஷயங்கள் நமது கட்டுப்பாட்டிலோ, கையிலோ இருக்காது. இந்த வேறுபாட்டை புரிந்துகொள்ளும் போது மனம் தெளிவாகிவிடும்.
எதிர்கால அச்சம்
இன்னும் நடக்காத விஷயங்களை நினைத்தே நிறைய பேர் கவலைப்படுகிறார்கள். அதாவது எதிர்கால அச்சமே நிறைய பேருக்கு கவலை தருகிறது. பரீட்சையில் தோல்வி அடைந்துவிடுவேனா..? விபத்து நடந்துவிடுமா..? நோய் தீர்க்க முடியாததாக மாறிவிடுமா? அவமானம் வந்துவிடுமா? என்றெல்லாம் நடக்காத விஷயத்துக்குக் கவலைப்படுவது மிகவும் சிக்கலானது. நிகழ்காலத்தில் மட்டும் கவனம் வைத்தால் போதும் என்ற சிந்தனை வந்துவிட்டால் மனம் அமைதியாகிவிடும்.
உடல் நலனில் அக்கறை
கவலை இல்லாமல் வாழ்வதற்கு சில அடிப்படை பண்புகள் அவசியம். உளவியல் மற்றும் மருத்துவ ரீதியாக மனம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே கவலையில் இருந்து வெளியே வர முடியும். எனவே, உடல் நலத்துக்கு எதிரான அனைத்து செயல்களையும் நிறுத்த வேண்டும். குறிப்பாக தூக்கமின்மை, அதிக மொபைல் பயன்பாடு, உடற்பயிற்சி இல்லாமை, ஒழுங்கற்ற உணவு போன்றவை கவலையை அதிகரிக்கும். அதோடு தினமும் நடைபயிற்சி, ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி, நல்ல தூக்கம், மகிழ்ச்சி தரும் பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது கவலையைக் குறைக்க உதவும்.
தனிமையே எதிரி
கவலை வரும்போது தனிமையை பலரும் விரும்புகிறார்கள். இது கவலையை அதிகரிக்குமே தவிர குறைக்காது. இந்த தருணத்தில் நம்பிக்கை தரும் மனிதர்களிடம் பேசுவது மன அழுத்தத்தை குறைக்கும். அவர் நல்ல நண்பராக அல்லது குடும்ப உறுப்பினராக இருக்கலாம். இவர்களிடம் பகிர்ந்துகொள்வதற்கு தயக்கம் இருந்தால் மனநல ஆலோசகர்களிடம் கவுன்சிலிங் செல்லலாம். இதனால் மனதில் சிக்கியிருக்கும் பாரத்தை குறைக்க முடியும்.
இயந்திரம் போன்று தினமும் ஒரே மாதிரி ஓடிக்கொண்டே இருப்பவர்களுக்கு மனம் வெறுத்துப் போயிருக்கும். மனம் எப்போதும் பதட்டமாக இருக்கும். எனவே, மனசுக்குப் பிடித்த செயல்களை அவ்வப்போது செய்து மனதை குளிர்ச்சியாக்க வேண்டும். பிடித்த கலை, ஓவியம், இசை, வாசிப்பு, உணவு, பிறருக்கு உதவி செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடும்போது மனம் அமைதியை உணரும்.
கவலை தீர்க்க புதிய வழி
கவலையுள்ள மனம் நிறைய குழப்பத்தில் இருக்கும். ஒரே நேரத்தில் நிறைய விஷயங்களை சிந்திக்கும். எனக்கு மட்டுமே இத்தனை சிக்கல், இத்தனை பிரச்னைகள் என்ற எண்ணம் வரும். எத்தனை கவலைகள் இருந்தாலும், அத்தனையையும் தீர்ப்பதற்கு ஒரு புதிய வழி இருக்கிறது. இந்த வழியில் உங்கள் கவலைகளை எல்லாம் விண்வெளி ராக்கெட்டில் அடைத்துச் சென்று சூரியனில் வீச முடியும். இந்த பயிற்சி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
- மிகவும் கவலையாக இருக்கும்போது இந்த பயிற்சி செய்யலாம். யாரும் தொந்தரவு செய்ய முடியாத இடத்தில் அமைதியாக அமர்ந்து கண்களை மூடிக்கொள்ளுங்கள். நன்றாக மூச்சை உள்ளே இழுத்து, வெளியே விட்டு, மனதை கொஞ்சம் அமைதிப்படுத்துங்கள். இப்போது உங்கள் மனதை ஒருநிலைப்படுத்தி, பிரமாண்டமான விண்வெளி ஓடத்தை காட்சிப்படுத்துங்கள். கருப்பு நிறத்தில், வலிமையான மிகப்பெரிய ராக்கெட் மற்றும் அதை இயக்கும் ஒரு ரிமோட்டை கற்பனையில் உருவாக்குங்கள்.
- ராக்கெட் உருவாக்கப்பட்டதும், அதற்குள் உங்கள் கவலைகளை எல்லாம் வரிசையாக ஒவ்வொன்றாகத் திணிக்க வேண்டும். இதுவரை உங்கள் மனதில் இருக்கும் கவலைகள், பயங்கள், சந்தேகங்கள், கோபங்கள், சோகங்கள் அனைத்தையும் கரிய நிறப் பொட்டலங்களாகக் கட்டி ராக்கெட்டுக்குள் திணியுங்கள். உங்கள் மனதில் இருந்த அத்தனை கவலைகளையும் காலி செய்துவிட்டீர்களா என்பதை மீண்டும் ஒரு முறை நன்கு பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
- ராக்கெட்டில் அத்தனை கவலைகளையும் ஏற்றியதும் அதன் கதவை நன்கு அடைத்துவிடுங்கள். இப்போது அந்த ராக்கெட்டை இயக்கும் ரிமோட்டை கையில் எடுத்துக்கொள்ளுங்கள். ராக்கெட்டை கிளப்புவதற்கு பட்டனை அமுக்குங்கள். ராக்கெட் விண்ணோக்கி ஜிவ்வென்று கிளம்புவதைப் பாருங்கள்.
- ராக்கெட் விண்வெளியைத் தாண்டிச் செல்லட்டும். ராக்கெட் நேரடியாக சூரியனை நோக்கிச் செல்வதாக கற்பனை செய்யுங்கள். ராக்கெட் வேகமாக செல்லட்டும். வீனஸ், மெர்க்குரி போன்ற கிரகங்களைத் தாண்டி சூரியனை நோக்கிச் செல்லட்டும்.
- சூரியனில் அந்த ராக்கெட் இறங்குவதாக கற்பனை செய்யுங்கள். வலிமையான ராக்கெட் என்றாலும் சூரிய வெப்பத்தில் அந்த ராக்கெட் கொஞ்சம் கொஞ்சமாக தீப்பிடித்து எரிவதைக் காணுங்கள். அந்த ராக்கெட்டில் இருந்த அத்தனை கவலைப் பொட்டலங்களும் தீப்பிடித்து ஒன்றும் இல்லாமல் எரிந்து போவதை நன்கு ரசித்துப் பாருங்கள்.
- கவலைகள் எல்லாம் எரிந்து சாம்பலானதும் உங்கள் மனதில் மகிழ்ச்சியும் அமைதியும் வருவதைக் கவனியுங்கள். இப்போது உங்கள் மனதில் எந்த கவலையும் இல்லை, எந்த துன்பமும் இல்லை. எல்லாமே சூரியன் வெப்பத்தில் எரிந்து சாம்பலாகிவிட்டது என்பதை எண்ணி மகிழ்ச்சி அடையுங்கள்.
- இப்போது கண்களை மெதுவாகத் திறங்கள். இந்த உலகத்தை புதுமையாகப் பாருங்கள். இன்று முதல் உங்கள் கவலைகள் தீர்ந்துவிட்டது என்ற நம்பிக்கையை உடல் முழுக்க பரப்புங்கள். இப்போது உங்கள் மனம் ஒரு துளி பாரமும் இன்றி, பஞ்சு போல லேசாக இருப்பதை உணரலாம். இந்த மனதை தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். அவ்வளவுதான்.
ஏன் இந்தப் பயிற்சி..?
பொதுவாக கவலைகளை நாம் எதிர்க்கும்போதும், அதை நினைக்கும் போதும் அது பெரிதாகிக்கொண்டே இருக்கும். இப்போது அந்த கவலைகள் எல்லாம் எரிந்துவிட்டன என்பதால் மனம் வலிமை பெறும். நரம்பு மண்டலத்திற்கு ஒரு ஆழமான விடுதலை கிடைக்கும். இனி, உங்கள் இயல்பான பணிகளைப் பாருங்கள். மீண்டும் எப்போதெல்லாம் அதிக கவலை வருகிறதோ, அப்போதெல்லாம் கவலையை மூட்டை கட்டி சூரியனில் எரித்துவிடுங்கள்.
அவ்வளவுதான் கவலைக்கு நீங்கள் தர வேண்டிய மரியாதை.
