உளவியல் உண்மை
கண்ணாடி டம்ளர் கீழே விழுந்து உடைந்த பிறகு, ‘இந்த இடத்தில் கண்ணாடி டம்ளரை வைத்திருக்கக்கூடாது, அதை கையில் அசால்ட்டாக எடுத்திருக்கக்கூடாது, கீழே விழுவதற்குள் பிடித்திருக்கலாம்’ என்றெல்லாம் எதையாவதுச் சொல்லி சொல்லி வருத்தப்படுகிறவர்கள் இருக்கிறார்கள். அதே போல் எதிர்பாராத தோல்வி, திடீர் மரணம் போன்றவைகளுக்கு எத்தனை கவலைப்பட்டாலும் எதுவும் மாறப் போவதில்லை.
அதாவது, நம்மால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களுக்குக் கஷ்டப்படக் கூடாது என்ற விதியை மட்டும் வாழ்க்கையில் கடைப்பிடிக்கத் தொடங்கினால் மனிதர்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ முடியும்.
மருத்துவர் வரும் நேரம்
உதாரணத்துக்கு ஒரு சம்பவம் பார்க்கலாம். காய்ச்சல் என்று மருத்துவமனைக்குச் செல்கிறீர்கள். உங்களுக்கு முன்பாக நான்கு பேர் இருக்கிறார்கள். டாக்டர் இன்னமும் வரவில்லை. இந்த சூழ்நிலையில் டாக்டர் எப்போது வந்து மற்றவர்களைப் பார்த்து, அதன் பிறகு வீட்டுக்குச் செல்வது என்ற கவலை பெரும்பாலோருக்கு வந்துவிடுகிறது. அதனால், உட்காரவும் முடியாமல் வெளியே செல்லவும் முடியாமல் தவியாய் தவிப்பார்கள்.
இங்கு கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். டாக்டர் எப்போது வருவார் என்பது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. அப்படி அவர் வந்தாலும் நான்கு பேரை பார்ப்பதற்கு எத்தனை நேரம் ஆகும் என்பதும் உங்களுக்குத் தெரியாது. உங்களால் இந்த நேரத்தில் செய்யக்கூடியது ஒன்றே ஒன்று. அதாவது, டாக்டர் வரும் வரையில் காத்திருக்கலாம் அதற்கு விருப்பமில்லை என்றால் வேறு ஒரு டாக்டரை பார்க்கப் போகலாம்.
இங்கேயே இருப்பதற்கு முடிவெடுத்துவிட்டால், நேரம் வீணாவதை நினைத்து கவலைப்படுவதில் அர்த்தமில்லை. ஓய்வு கிடைத்திருக்கிறது என்ற மனநிலைக்கு மாறி அந்த சூழலை மகிழ்ச்சியுடன் வேடிக்கை பார்க்கலாம், செல்போனில் ஏதேனும் பார்க்கலாம், படிக்கலாம் அல்லது மனதுக்குப் பிடித்தவர்களிடம் பேசலாம். அந்த நேரம் உண்மையிலே அற்புதமாக மாறிவிடும்.
நேரத்தை சிக்கலாக மாற்றிக்கொள்வதும், மகிழ்ச்சியாக மாற்றிக்கொள்வதும் நமது கையில் தான் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
