பார்க்காமல் காதல் ஜெயிக்குமா..?

ஆச்சர்ய உண்மை

காதல் கோட்டை படத்தில் அஜித் – தேவயானி பார்க்காமலே கடிதம் மூலம் காதலித்து அதில் வெற்றியும் பெறுவார்கள். சினிமாவில் இப்படி நடக்கலாம். நிஜத்தில் அடிக்கடி நேரில் பார்த்துக்கொள்ளாத காதல் தோற்றுவிடும் என்பது தான் உளவியல் உண்மை.

ஏனென்றால் மனிதருக்கு மறதி அதிகம். அதனால்தான் உயிருக்கு உயிராகக் கருதும் அம்மா, அப்பா, பிள்ளை மரணம் அடைந்தால் கூட, கொஞ்ச நாட்கள் அழுதுவிட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிடுகிறார்கள். பள்ளி ஆசிரியர், கல்லூரி நண்பர்கள், பக்கத்துவீட்டுக்காரர் என்று எத்தனை பேர் இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள். அவர்கள் தொடர்பு முடிந்ததும் அவர்களைப் பற்றிய நினைவுகளும் தேயத் தொடங்கிவிடும்.

இது, காதலுக்கும் பொருந்தும். வீடியோ கால், விமானப் பயணம் போன்ற வசதிகள் இருந்தாலும் அடிக்கடி சந்திக்காத காதல் விரைவில் வலுவிழந்து போய்விடும். அதனால் தான், ‘ஒரு வருஷம் பிராஜெக்ட்டுன்னு  ஃபாரின் போயிட்டு வந்தேன். அதுக்குள்ள எல்லாம் மாறிப் போச்சு’ என்பார்கள். இதற்கு யாரையும் குற்றம் சாட்ட முடியாது. ஏனென்றால், யாரை அடிக்கடி சந்திக்கிறோமோ, யாரிடம் அடிக்கடி பேசுகிறோமோ அவர்களின் நினைவு அதிகம் வரும், பழைய காதல் மறைந்துவிடும்.

அதனால், காதலில் ஜெயிக்க வேண்டும் என்றால் நேரில் சந்தித்துக்கொண்டே இருங்கள். ‘எங்கள் காதல் புனிதமானது’ என்றெல்லாம் டயலாக் பேசினால் தேவையில்லாமல் சண்டை வந்து காதல் காணாமல் போய்விடும். எனவே எப்போதும் நெருக்கமாக இருந்து காதலில் வெற்றி பெறுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment