எட்டு அடையாளங்கள்
ஆண் – பெண் உறவு என்பது பரஸ்பர அன்பு மற்றும் மரியாதையின் அடிப்படையில் அமைவது. ஆனால், சில நேரங்களில் அதீத சுயநலம் கொண்ட பெண்களிடம் சிக்கிக்கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை நரகமாகிவிடும். குறிப்பாக, பெண்ணின் சில குணாதிசயங்கள் அந்த உறவைச் சிதைக்கக்கூடும். அதீத சுயநலம் என்பது ஒரு மனநோய் போன்றது.
அத்தகைய நச்சுத்தன்மை குணங்கள் கொண்ட பெண்களை அடையாளம் காணவும், அவர்களிடமிருந்து விலகிச்செல்வதும் மிகவும் முக்கியம். எல்லா பெண்களும் பார்வைக்கு நல்லவர்களாகவே இருப்பார்கள். ஆகவே, டாக்ஸிக் பெண்களை கண்டுபிடிக்க உதவும் 8 முக்கிய அடையாளங்களைப் பார்க்கலாம்.
1. திட்டுவதே இனிமை
எப்போதும் எதற்காவது குறை சொல்லிக்கொண்டே இருப்பது இவர்களின் சுபாவம். சுற்றி இருப்பவர்கள் யாரைப் பற்றியும் ஒரு நல்ல வார்த்தை இவர்களிடம் வராது. இது, அவர்களுடன் இருக்கும் அத்தனை பேரின் தன்னம்பிக்கையையும் சிதைத்துவிடும்.
2. அங்கீகாரத்துக்கு ஆசை
பெண் தோழிகளை விட, எப்போதும் அதிகம் ஆண் நண்பர்கள் தன்னைச் சுற்றி இருக்க வேண்டும் என விரும்புவார்கள். பொதுவாக பெண்களை ஆண்களே அதிகம் புகழ்வார்கள். எனவே, ஆண்களிடம் இருந்து கிடைக்கும் அட்டென்ஷன் மற்றும் புகழ்ச்சிக்காக அதிக ஆண்களுடன் பழக விரும்புவார்கள். இப்படி திட்டமிட்டுப் பழகுவதால் இந்த உறவில் நேர்மை இருப்பதில்லை.
3. சண்டைக்கு நான் ரெடி
மரம் சும்மா இருந்தாலும் காற்று அப்படி விடுவதில்லை என்பார்கள். அப்படித்தான் வீடு அமைதியாக இருப்பது இவர்களுக்குப் பிடிக்காது. மிக சாதாரண விஷயங்களுக்கும் முதலில் சண்டையை தொடங்குவது அவர்களுடைய குணமாக இருக்கும். ஏதேனும் ஒரு பழைய விஷயத்தைத் தோண்டி எடுத்துச் சண்டையைத் தொடங்குவதிலும் கில்லாடியாக இருப்பார்கள். எபோதும் அமைதியை விட பதற்றமான சூழலையே விரும்புவார்கள்.

4. சின்னச்சின்ன பொய்கள்
தேவை இல்லாத இடத்திலும் பொய் பேசுவது. உண்மையை மறைப்பது இவர்களுக்கு இயல்பான தற்காப்புக் குணமாக இருக்கும். பொய் பேசுவதை எதிரே இருப்பவர் கண்டுபிடித்துவிட்டார் என்பது தெரிந்தாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இது ஒட்டுமொத்த நம்பிக்கையையும் அடியோடு அழித்துவிடும்.
5. அக்கறையின்மை
அடுத்தவர் எல்லைக்குள் நுழைவதற்குத் தயங்கவே மாட்டார்கள். நண்பர்கள், துணையின் உணர்வுகளுக்கு அல்லது கஷ்டங்களுக்கு துளியும் மதிப்பு கொடுக்க மாட்டார்கள். இதில் எனக்கு என்ன ஆதாயம் என்பது மட்டுமே இவர்களின் ஒரே கவலையாக இருக்கும்.
6. போலி கௌரவம்
அன்பை விட ஆடம்பரப் பொருட்களுக்கே முக்கியத்துவம் தருவார்கள். மற்றவர்கள் தன்னை மெச்ச வேண்டும் என்பதற்காக பொருளாதார நிலையை மீறிச் செலவு செய்வார்கள். தன்னைப் பற்றி ரொம்பவும் பெருமையாகப் பேசுவார்கள்.
7. அன்பென்று அதிகாரம்
அதிகப்படியாகச் சந்தேகப்படுவது. எங்கே போகிறாய்? யாருடன் பேசுகிறாய்? என்று ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்கும் குணம் இருக்கும். இதை உண்மையான அன்பு என்று சொல்லி மழுப்புவார்கள். ஆனால் இது உண்மையில் சிறைவாசம்
8. அவமரியாதை
தன்னைப் பெற்றவர்கள், உறவினர்களைக்கூட கொஞ்சமும் மரியாதை இல்லாமல் பொதுவெளியில் அவமரியாதை செய்பவர்களாக இருப்பார்கள். பெற்றவர்கள் எத்தனையோ தியாகம் செய்திருப்பார்கள், அதையெல்லாம் மதிக்காதவர்கள் மற்றவர்களையும் ஒருபோதும் மதிக்க மாட்டார்கள்.
ஒரு பிரச்னை உருவாகும்போது சாதாரண பெண்கள் பேசித் தீர்ப்பதற்கு ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், டாக்ஸிக் பெண்கள் சண்டைக்குத்தான் ஆசைப்படுவார்கள். சிக்கனம், சேமிப்பு மற்றும் உறவுகளின் பெருமை அறியாதவர்களாக இருப்பார்கள்.
நிறைய பெண்களிடம் இப்படிப்பட்ட குணம் இருப்பதுண்டு. இவை எல்லாமே தவறு என்று தெரியாமலே நிறைய பேர் தொடர்வதுண்டு. எனவே, இந்த குணங்களை பெண்கள் மாற்றிக்கொள்ளவில்லை என்றால் ஆண்களும் குடும்பமும் ரொம்பவே சிக்கலில் மாட்டிக் கொள்ளும்.
