ஞானகுரு பதில்கள்
கேள்வி ; தடுப்பூசிகளால் நன்மைகளை விட தீமைகளே அதிகம் என்று சிலர் சொல்வது உண்மையா..?
- பெ.கருணாகரன், மங்களூர்.
ஞானகுரு :
இயற்கை மருத்துவமே மக்களுக்குப் போதும் என்று நம்பும் மனிதர்கள் இன்றும் வாழ்கிறார்கள். அனைத்து வகை மஞ்சள் காமாலை நோயையும் கீழாநெல்லி மூலிகை குணப்படுத்தும் என்று நம்புகிறார்கள். வீட்டில் பிரசவம் சிம்பிள் என்று ஊக்கப்படுத்துகிறார்கள். இயற்கை உணவு மட்டும் சாப்பிடுபவருக்கு எந்த நோயும் வராது என்று நினைக்கிறார்கள். இவர்கள்தான் தடுப்பூசி போட்டுக்கொண்டால் பக்கவிளைவு வரும் என்று அச்சமூட்டுகிறார்கள்.
தடுப்பூசி மட்டுமல்ல, எந்த ஒரு மருந்து சாப்பிட்டாலும் பக்கவிளைவு வரும் என்பது நூறு சதவீதம் உண்மை. ஆனால், தடுப்பூசியால் கிடைக்கும் நன்மைகள் அதைவிட ஆயிரம் மடங்கு அதிகம்.
போலியோ
கடந்த நூற்றாண்டில் கால் வளைவு, சப்பாணி என்று லட்சக்கணக்கான மனிதர்கள் போலியோவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அந்த எண்ணிக்கை இப்போது கிட்டத்தட்ட பூஜ்ஜியம் எனும் அளவுக்கு தடுப்பூசியாலே சாத்தியமாகியிருக்கிறது. அதேபோல் உயிருக்கு ஆபத்தான பெரியம்மை, ரூபெல்லா போன்ற பல நோய்களை தடுப்பூசிகள் தடுத்து நிறுத்தியிருக்கிறது.
கொரோனா காலத்தில் தடுப்பூசிகளே நிறைய மக்களின் அச்சத்தைப் போக்கியது. தடுப்பூசிகளாலே மனிதர்களின் ஆயுட்காலத்தின் சராசரி அதிகரித்துள்ளது.
ஆட்டிசம்
தடுப்பூசியால் அதிக எண்ணிக்கையில் குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைகிறது என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளில் எதுவுமே உண்மை இல்லை. எனவே நம்பிக்கையுடன் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
