ரேவதிகள் இருக்கிறார்கள்.
கேள்வி : காவல் துறையினர் எல்லோருமே அதிகாரம் செய்வதும், பணம் பறிப்பதும் அதிகரித்துவிட்டதே, நல்லவர்கள் காவல்துறையில் இருக்க முடியாதா..?
- சி.ராகவன், சென்னை.
ஞானகுரு :
அதிகாரத்தைக் காட்டுவதற்கும், பணம் சம்பாதிப்பதற்கும் காவல் துறை மட்டுமல்ல எல்லா துறைகளிலும் ஆட்கள் அதிகரித்துவிட்டார்கள் என்பது உண்மை. அதேநேரம், எல்லா துறைகளிலும் நல்லவர்களும் இருக்கவே செய்கிறார்கள். இதற்கு உதாரணமாக காவலர் ரேவதியைச் சொல்லலாம்.
தமிழகத்தை உலுக்கிய சாத்தான்குளம் தந்தை, மகன் படுகொலை வழக்கு எல்லோருக்கும் தெரிந்திருக்கும். 2020ம் ஆண்டு ஊரடங்கு காலத்தில், அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி கடையைத் திறந்து வைத்ததாகக் கூறி, சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். விசாரணையில் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலால் அடுத்தடுத்த நாட்களில் இருவரும் உயிர் இழந்தனர்.
இந்த வழக்கில் சமீபத்தில் மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது, குற்றம் சாட்டப்பட்ட 9 காவலர்களும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்குப் பின்னே இருக்கிறார் காவலர் ரேவதி.
காவல் நிலையத்திற்குள் நடந்த தாக்குதலை ரகசியமாக வைத்திருக்க காவல் துறையினர் திட்டமிட்டனர். மேலும் கொரோனாவில் செத்துப்போனதாக இருவரையும் கணக்கு காட்டவும் முயற்சி மேற்கொண்டனர்.
இந்த நேரத்தில், காவல் நிலையத்திற்குள் நடந்த உண்மையை பேசியவர் காவலர் ரேவதி.
அவர் வாயை அடைப்பதற்கு முயற்சிகள் நடந்தன. போலீஸை போலீஸே காட்டித்தரக் கூடாது என்று எச்சரிக்கை செய்தனர். ஆனாலும், மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு, துணிச்சலுடன் உண்மையை பேசினார் ரேவதி.
காவல் நிலையத்தில் தந்தை மற்றும் மகன் இருவரும் விடிய விடிய தாக்கப்பட்டதை மாஜிஸ்திரேட் விசாரணையில் ரேவதி உறுதிப்படுத்தினார். அவர் அளித்த வாக்குமூலம் இந்த வழக்கின் போக்கையே மாற்றியது. அதனாலே இவ்வழக்கில் தொடர்புடைய 9 காவலர்களும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வந்திருக்கிறது.
காவல் துறையிலும் நேர்மையான ஒருவர் இருக்கிறார் என்பதற்கு உதாரணமாக நிற்கிறார் ரேவதி. எல்லா துறைகளிலும் ரேவதிகள் இருக்கிறார்கள். இருப்பார்கள்.
