வரலாற்று நாயகன்
படிப்பு ஒரு மனிதரை எந்த அளவுக்கு உயர்த்தும் என்பதற்கு ஒரே உதாரணம் டாக்டர் அம்பேத்கர். படிக்க விரும்பினேன் எனக்கு நிறைய இடைஞ்சல்கள் என்று இந்த காலத்திலும் சிலர் புலம்புவதைப் பார்க்க முடிகிறது. அவர்களுக்கு அம்பேத்கரின் வாசனை அறியாதவர்கள்.
புத்தகங்களை உயிராக நேசித்தார். கல்வி மட்டுமே தன்னை உயர்த்தும், அதன் மூலமே தன் மக்களை முன்னேற்ற முடியும் என்று நம்பினார். அதில் வெற்றி அடைந்தார். அதன் பின்னரும் புத்தகங்களின் காதலராகவே இருந்தார்.
மனிதர்கள் வீட்டில் புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பார்கள். ஆனால், அம்பேத்கர் வீடு அப்படிப்பட்டதில்லை. ஆம், புத்தகங்களின் வீட்டுக்குள் விருந்தாளி போன்று ஒட்டிக்கொண்டு இருந்தார் அம்பேத்கர். இதை கண்டு மன்னரே வியந்த நிகழ்ச்சியும் நடந்தது.
சாகுமகாராஜா
1920-ம் ஆண்டு மார்ச் 21-ல் கோல்ஹாப்பூர் சமஸ்தானத்தில் மான்கோன் என்ற இடத்தில் நடைபெற்ற தீண்டப்படாதவர்கள் மாநாட்டிற்கு தலைமை தாங்கினார் அம்பேத்கர். அந்த மாநாட்டில் சாகுமகாராஜாவும் கலந்து கொண்டு அம்பேத்கர் என்னும் சிறந்த ஆளுமையை அடையாளம் காட்டும் வகையில் அவர் பேச்சு அமைந்தது.
“மக்களே இந்த மனிதரின் பின்னால் அணி திரளுங்கள். இந்த மகத்தான மனிதரை விட்டு விடாதீர்கள் அம்பேத்கர் உருவத்தில் உங்கள் மீட்பரைக் கண்டுக் கொள்ளுங்கள்”
அடிமைகளின் மீட்பர்
உங்கள் அடிமை விலங்கை இவர் உடைத்தெறிவார் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அது மட்டுமல்ல ஒரு காலம் வரும். அப்போது அனைத்து இந்திய அளவில் மதிப்பு மிக்க, புகழ் வாய்ந்த தலைவர்களில் ஒருவராக அம்பேத்கர் திகழ்வார் என்று என் மனம் சொல்கிறது” என்று அந்த மாநாட்டில் பாபாசாகேப் அம்பேத்கரின் எதிர்காலம் எப்படி அமையப் போகிறது. கோல்ஹாப்பூர் சாகுமகாராஜா சொன்ன வார்த்தைகள் எதிர்காலத்தில் நிஜமானது.
கோல்ஹாப்பூர் மன்னர் சாகு மகாராஜா எந்த அளவுக்கு அம்பேத்கரிடம் அன்பும் மதிப்பும் கொண்டிருந்தார் என்பதற்கு சான்றாக அமைந்த ஒரு நிகழ்ச்சி ஒருநாள் திடீரென்று மன்னர் சாகுமகாராஜா அம்பேத்கரின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
விருந்தாளி மன்னர்
தன் சிறிய வீட்டிற்குள் வரும் மகாராஜாவை பார்த்ததும் அம்பேத்கர் வியந்துபோய் விரிந்த கண்களுடன் பார்த்து விரைவாக சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு, எதிர்கொண்டு சென்று மகாராஜாவை வரவேற்றார். மன்னரைத் தாம் படிக்கும் அறைக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்தார்.
இத்தனை சிறிய அறையில், இத்தனை புத்தகங்களுக்கு மத்தியில் ஒரு மேதை வாழ்ந்து வருவதைப் பார்த்து சாகு மகாராஜாவுக்கு மிகுந்த வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. ஆடம்பரமில்லாத அம்பேத்கரின் எளிமையான வாழ்க்கை முறை கண்டு அதிசயித்தார்.
கோல்ஹாப்பூர் மகாராஜா டாக்டர் அம்பேத்கருடன் சிறிதுநேரம் பேசிவிட்டு புறப்பட்டுச் சென்றார். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களிடம் மன்னர் எந்தளவுக்கு அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார் என்பதற்கு இது ஒரு சான்று.
சேமிப்பே முக்கியம்
அம்பேத்கர் பேராசிரியரான பின்னர் கைநிறைய சம்பளம் பெற்ற போதிலும் சிக்கனமாகவே வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். பரேலில் தொழிலாளர்கள் வாழும் புதிய குடியிருப்பில் எதிர் எதிராக இரு அறைகள் அமைந்த வீட்டில் தான் அப்போதும் வசித்து வந்தார். எவ்வளவு வருமானம் வந்த போதும் ஊதாரித்தனமாக செலவு செய்யவில்லை. தன் சம்பளத்தில் ஒரு தொகையை குடும்பம் நடத்த மனைவியிடம் கொடுத்து வந்தார். அவருடைய பிடிவாதம் நிறைந்த சேமிப்பே பின்னர் அவருக்கு மிகப் பெரிய வெற்றிக்கு அவரை அழைத்துச் சென்றது. லண்டன் சென்று படிக்க நினைத்ததைச் சாதிக்க அவருடைய சேமிப்பு கொஞ்சம் கை கொடுத்தது.
ஒரே நேரத்தில் பேராசிரியராக, பத்திரிகையாளராக, மாநாட்டு மேடைப் பேச்சாளராகத் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கான போராளியாக வாழ்க்கையே போராட்டமாக அமைத்துக் கொண்டு பல துறைகளில் பிரகாசித்தார்.
