கவலைகள் எல்லாமே கற்பனைகள்

இழப்பதற்கு எதுவும் இல்லை

மனித வாழ்க்கையின் பெரும்பாலான கவலைகள் நிஜமானவை அல்ல, அவை எல்லாம் கற்பனைகள். அதாவது, இப்படி நடந்தால் என்னாகும் என்ற பயமே நிறைய கவலைகளுக்குக் காரணமாக இருக்கிறது. ஆனால் அந்த பயங்களை ஒவ்வொன்றாக ஆராய்ந்து பார்த்தால் உண்மையை உணரலாம். பலரையும் அச்சுறுத்தும் முக்கியமான சில பயங்களைப் பார்க்கலாம்.

மரணம்
வாழ்க்கையின் மிகப்பெரிய உண்மை மரணம். ஜனாதிபதிக்கும், சாதாரண மனிதருக்கும் முடிவு ஒன்றுதான். துறவிக்கும் பிச்சைக்காரருக்கும் ஒரே முடிவுதான்.  எல்லோரும் ஒருநாள் இறக்கப் போகிறோம். அதற்காக வாழ்வதற்குப் பயந்து மரண தண்டனைக் கைதி போன்று ஒவ்வொரு நாளையும் சிறைச்சாலை வாழ்வாக கழிப்பதற்கு அவசியம் இல்லை. அனைத்து உயிரினங்களும் இன்றைய வாழ்வுக்காகவே அலைகின்றன. எதிர்கால மரணம் பற்றிய அச்சத்தில் எந்த பறவையும் கூட்டுக்குள் முடங்குவதில்லை. எனவே, இன்றைய வாழ்க்கையை அனுபவித்து சிறப்பாக வாழ்வதே மரணத்துக்கு நாம் செய்ய வேண்டிய மரியாதை.

நஷ்டம்
பணம் இழக்கலாம். தொழில் தோற்கலாம். சொத்துகள் போகலாம். ஆனால் பணத்தை மீண்டும் சம்பாதிக்க முடியும். வரலாற்றில் பல வெற்றியாளர்கள் திவாலாகி மீண்டும் எழுந்திருக்கிறார்கள். பணத்தை இழப்பதால் வாழ்க்கை அழிவதில்லை. மனிதரின் மிகப்பெரிய சொத்து அவனுடைய திறமையும் அனுபவமும்தான்.  நம்பிக்கை இழக்காத மனிதரால் எத்தகைய நஷ்டத்திலிருந்தும் மீண்டுவிட முடியும்.

அவமானம்
அவமானத்திற்குப் பயந்தே பலர் புதிய முயற்சிகளைத் தொடங்குவதில்லை. பலர் வாழ்க்கையில் முன்னேறாமல் இருப்பதற்கு அவமானம் பற்றிய பயமே காரணம். உளவியல் உண்மை என்னவென்றால், மக்கள் அடுத்தவர் பற்றி நினைப்பதைவிட தங்களைப் பற்றியே அதிகம் சிந்திக்கிறார்கள். அதனால் இன்று அவமானம் நிகழ்ந்தாலும் நாளை யாருக்கும் ஞாபகம் இருக்காது. எனவே, அவமானம் கிடைக்கும் என்ற அச்சம் அவசியமே இல்லை.

நிராகரிப்பு

காதல், வேலை, உறவு, வாய்ப்புகளில் நிராகரிப்புக்கு பலரும் அஞ்சுகிறார்கள்.  உலகின் மிகச்சிறந்த கலைஞர்கள், விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள் கூட ஒருகாலத்தில் நிராகரிக்கப்பட்டவர்களே. படிப்பதற்கே லாயக்கில்லை என்று நிராகரிக்கப்பட்டவர் எடிசன். நடிப்பதற்கே தகுதியில்லை என்று நிராகரிக்கப்பட்டவர் சில்வஸ்டர் ஸ்டோலன். எனவே, நிராகரிப்பு என்பது தகுதியற்றவர் என்பதற்கான சான்று அல்ல; அது இன்னும் சரியான இடத்தில் தேடவில்லை என்பதற்கான அறிகுறி. ஒரே ஒரு வாய்ப்பில் அத்தனை நிராகரிப்புகளும் மறைந்துவிடும்.

தோல்வி
தோல்வி அடைந்துவிட்டால் எல்லாமே முடிந்துவிட்டது என்ற எண்ணம் பலரை அச்சுறுத்துகிறது. அதனால் போட்டியிடாமல் வேடிக்கை பார்க்கிறார்கள். தோல்வியும் வெற்றியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கம். வெற்றி பெற்றவர்கள் தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டவராலே வெற்றி அடையமுடியும். எல்லா வெற்றியாளரும் ஒரு காலத்தில் தோல்வி அடைந்தவர்களே. எனவே, தோல்வியை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதே உண்மையான வெற்றிக்கு அடிப்படை.  

விமர்சனம்
என்ன செய்தாலும் சிலர் பாராட்டுவார்கள், சிலர் விமர்சிப்பார்கள். வெற்றி பெற்றால் அதிர்ஷ்டம் என்பார்கள்; தோற்றால் முட்டாள்தனம் என்பார்கள். ஆனால், இவர்கள் யாரும் எந்த உதவியும் செய்யப்போவதில்லை. எனவே, இவர்களின் கருத்துகளுக்கு கவலைப்படுவதற்கு அவசியமே இல்லை. செயல் மட்டுமே சிந்தனையாக இருக்கவேண்டும்.

பிரிவு
வாழ்க்கையில் எல்லோரும் கடைசி வரை ஒன்றாகப் பயணிக்கப் போவதில்லை. அம்மா, அப்பா, நண்பர், மனைவி, பிள்ளை என்று எல்லோரும் ஒரு கட்டத்தில் பிரிவார்கள். சிலர் ஒரு அத்தியாயத்திற்கு வருகிறார்கள்; சிலர் பாடம் கற்றுத்தர வருகிறார்கள். பிரிவுகள் வேதனை தரலாம். ஆனால் சில பிரிவுகள் புதிய வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கும் என்று நம்புவதே சரியானது.

தவறுகள்
தவறு செய்யாத மனிதர்கள் யாரும் இல்லை. உண்மையில், தவறு செய்வதே மனித இயல்பு. நாம் உயிருடன் இருக்கும் வரை தவறுகளிலிருந்து மீண்டு வர முடியும். ஒரு தவறு வாழ்க்கையின் முடிவு அல்ல; அது வாழ்க்கையின் ஆசிரியர். முயற்சி செய்யாமல் இருப்பதுதான் தவறு.

பொதுவாக மனிதர்கள் செய்த தவறுகளைவிட, செய்யாமல் விட்ட வாய்ப்புகளை நினைத்தே அதிகம் வருந்துகிறார்கள். முயற்சி செய்து தோல்வியடைவது வலிக்கலாம். ஆனால் முயற்சிக்காமல் வருந்துவது அதைவிட அதிகம் வலிக்கும்.

எனவே, அச்சுறுத்தும் பெரும்பாலான விஷயங்கள் நிரந்தரமானவை அல்ல. நிஜமானவை இல்லை. பணத்தை மீட்டெடுக்கலாம். அவமானத்தை மறந்துவிடலாம். தோல்வியிலிருந்து எழுந்துவிடலாம். தவறுகளைச் சரிசெய்துவிடலாம். சிலரை இழந்தாலும் புதியவர்கள் வாழ்க்கைக்குள் வருவார்கள்.

எனவே, ஒவ்வொரு நாளும் கடைசி நாள் போல வாழுங்கள். பயத்தை விட அனுபவத்தைத் தேர்ந்தெடுங்கள். பாதுகாப்பை விட அர்த்தமுள்ள வாழ்க்கையைத் தேர்ந்தெடுங்கள். பெறுவதற்கு அளவற்ற வாய்ப்புகள் இருப்பது தெரியவரும்.

Leave a Comment