மரணத்திற்குப் பிறகு ஆடுகள் மேகமாகின்றன.

சினிமா எனும் வாழ்க்கை

The Sheep Detectives

சித்தர்கள், ஞானிகளுக்கு மரணம் கிடையாது, அவர்கள் நட்சத்திரமாக மாறிவிடுகிறார்கள் என்பது ஆன்மிகவாதிகளின் நம்பிக்கை. அவர்கள் சாதாரண மனிதர்கள் போன்று மரணம் அடைவதை மனம் ஏற்றுக்கொள்வதில்லை. அதனாலே, அவர்கள் நட்சத்திரமாக மாறி என்றென்றும் உயிரோடு இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள். முன்னோர்கள் காகமாக வருகிறார்கள் என்பதும் பலருடைய அசைக்க முடியாத நம்பிக்கை.

அதேவழியில், ’மரணத்திற்குப் பிறகு ஆடுகள் மேகமாக மாறுகின்றன’ என்பதுதான் தி ஷீப் டிடெக்டிவிஸ் படத்தின் ஒரு வரி தத்துவம். இந்த படத்தில் ஆடுகள் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன. குழந்தைகளுக்கான நகைச்சுவைப் படமாகத் தொடங்கி ஒரு தத்துவார்த்த சஸ்பென்ஸ் திரில்லர் அனுபவமாக முடிவடைகிறது.

பொதுவாக குழந்தைகளுக்கு மரணத்தைப் புரிந்துகொள்ளும் பக்குவமும் ஏற்றுக்கொள்ளும் மனவலிமையும் இருப்பதில்லை. அதனால் நெருங்கியவர்கள் மரணத்தை, ‘அவர் சாமியிடம் போயிருக்கிறார்’ என்று சொல்லி வைப்பார்கள்.

அப்படித்தான் இந்த படத்தில் ஆடுகள் மரணத்தை மேகமாகப் பார்க்கின்றன. ஆடுகளுக்கும் மேகங்களுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. செம்மறி ஆடுகளுக்கு மேகங்களைப் போன்று உடல் முழுவதும் புசுபுசுவென்று முடிகள் இருக்கிறது. ரோமங்கள் மென்மையானவை. இரண்டும் மெதுவாகவும், அமைதியாகவும் நகர்பவை, கூட்டமாக வாழ்பவை. மேகத்தை கையில் பிடிக்க முடியாது, அவற்றுடன் பேச முடியாது. ஆனால், அவை இருக்கின்றன. அதேபோல் மரணத்திற்குப் பிறகு உடலைத் தொடமுடியாது, பேச முடியாது, ஆனால், இருக்கின்றன.

மேய்ச்சல் நிலத்தில் இருக்கும் ஆடுகளை தூரத்தில் பார்க்கும்போது, அவை நிலத்தில் மிதக்கும் சிறிய மேகங்கள் போலவே தோன்றும். அதனால் மரணத்திற்குப் பிறகு ஆன்மா வானத்தில் மேகமாகிறது என்று ஆடுகள் நம்புகின்றன.

மரணத்தை ஒரு முடிவாகப் பார்க்காமல் ஒரு வடிவத்தின் மாறுதலாகப் பார்க்கின்றன. உடலும் உயிரும் இல்லை என்பதை ஏற்றுக்கொள்வது மனதிற்கு கடினம் என்பதால், வானத்தில் வேறு வடிவில் தொடர்வதாக நம்புவது உளவியல் ரீதியில் திருப்தியளிக்கிறது.

அதனாலே இந்த படத்தில் ஆடுகளின் பாதுகாவலாக வரும் ஜார்ஜ் ஹார்டி மரணமடைந்து கிடப்பதைக் கண்டு ஆடுகள் அழுவதில்லை. அவர் மறையவில்லை, அவர் எங்கோ இருந்து நம்மை பார்க்கிறார் என்று மரணத்தை ஒரு புதிய இயற்கை மாற்றமாகப் பார்க்கின்றன.

ஆட்டு மந்தைகளுக்கு புத்தி கிடையாது என்பது மனிதர்களின் எண்ணம். ஒரு ஆடு தாண்டிக் குதித்தால், அங்கு எந்த தடையும் இல்லை என்றாலும் அடுத்தடுத்த ஆடுகளும் தாண்டிக் குதிப்பது வழக்கம். ஆடுகள் எல்லாமே முட்டாள்கள் என்பதை இந்த படம் உடைக்கிறது.

இந்த படத்தின் கதை ரொம்பவே சிம்பிளானது.

இங்கிலாந்து நாட்டின் ஒரு கிராமத்துப் புல்வெளியில் ஆடுகளை மேய்த்து அவற்றின் உரோமங்களை மட்டும் விற்பனை செய்கிறான் ஜார்ஜ் ஹார்டி. இறைச்சிக்காக ஆடுகளை விற்பனை செய்யாமல் அவற்றின் மீது பேரன்பு செலுத்துகிறான்.

மனிதர்களில் புத்திசாலி, சோம்பேறி, தைரியசாலி, முட்டாள், அறிவாளி என்று இருப்பது போல் ஆடுகளையும் தனித்தனி குணங்களுடன் அடையாளம் கண்டுபிடிக்கிறான் ஜார்ஜ்.

ஆடுகளுக்கு விசேஷ மருந்து கொடுத்து நோயிலிருந்து பாதுகாக்கிறான். தினமும் மாலை ஆடுகளுக்கு துப்பறியும் நாவல்கள் படித்துக் காட்டுகிறான். இத்தனை அன்பு காட்டிய ஜார்ஜ் ஒரு நாள் செத்துக் கிடக்கிறான். அவனுடைய மரணத்தை ஹார்ட் அட்டாக் என்று கருதுகிறான் காவல் அதிகாரி.

ஜார்ஜ் கொலை செய்யப்பட்டுள்ளான் என்று கண்டுபிடிக்கிறது லில்லி என்ற ஆடு. ஜார்க்கு இணையான வேடத்தில் கலக்கும் புத்திசாலி டிடெக்டிவ் ஆடான லில்லி, உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரிக்கு எப்படி உதவுகிறது என்பதுதான் கதை.

ஜெர்மன் எழுத்தாளர் லியோனி ஸ்வாண் எழுதிய, ‘திரி பேக்ஸ் ஃபுல்’ என்ற நாவலின் அடிப்படையில் கய்லி பால்டா இயக்கியுள்ள படத்தில் ஜார்ஜ் ஹார்டியாக ஹூஜ் ஜாக்மேன் நடித்துள்ளார். அதிரடி ஆக்‌ஷன் சண்டை படங்களில் நடித்துப் புகழ்பெற்ற ஹூஜ் ஜாக்மேன் இந்த படத்தில் ஹீரோயிசம் காட்டாத அன்பான ஆடு மேய்ப்பவனாக நடித்துள்ளார். 

மனிதர்கள் ஆடுகளைக் கவனிப்பது போலவே, ஆடுகளும் மனிதர்களை உன்னிப்பாகக் கவனிக்கின்றன என்பதைச் சொல்லும் இந்த படம் அழகியல் கவிதையாக விரிகிறது.

ஜார்ஜ் இறந்த பிறகு, அந்த ஆடுகள் அனுபவிக்கும் குழப்பம், மனிதர்கள் ஒரு அன்புக்குரியவரை இழக்கும் அனுபவத்தைப் பிரதிபலிக்கிறது. ஜார்ஜ் ஹார்டி இறந்ததும், அவரை யார் கொன்றது, எப்படி கொலை நடந்தது என்று மற்ற ஆடுகள் கேட்கும்போது, லில்லி ஆடு மட்டும் அவர் ஏன் தனியாக வாழ்ந்தார், மனிதர்கள் ஏன் தங்கள் துக்கத்தை மனம் விட்டுப் பேசாமல் மறைத்துக்கொள்கிறார்கள் என்று கேள்வி எழுப்புகிறது.

அதேபோல் “ஜார்ஜ் உயிருடன் இல்லை… ஆனால் அவரது குரல், வாசிப்பு இன்னும் நம்முள் இருக்கிறது” என்று கதைகள் மூலம் அவரை நினைவில் வைக்கச் சொல்கிறது.

ஜார்ஜை கொன்றவரை பழி வாங்குவதற்காக லில்லி குற்றவாளியைத் தேடவில்லை, ஜார்ஜை நினைவில் வைத்திருப்பதற்காகவே துப்பறிகிறது. எல்லா நினைவுகளையும் மனதில் சுமந்திருக்கும் மாப்பிள், தனியாகவே வாழும் செபாஸ்டின், மற்ற ஆடுகளால் ஒதுக்கிவைக்கப்படும் விண்டர் லேம்ப் என விதவிதமான கேரக்டர்களில் ஆடுகள் அட்டகாசம் செய்கின்றன.

யார் அந்த கொலையாளி என்பது கடைசி வரை சஸ்பென்சாக வைக்கப்பட்டிருந்தாலும், படம் மெதுவாக நகர்வது கொஞ்சம் பொறுமையை சோதிக்கலாம். ஆனால், நினைவுகள் அழிவதில்லை என்பதை மென்மையான கவிதையாகச் சொல்கிறது இந்த படம். அமேசானில் தமிழில் கிடைக்கிறது, மறக்காமல் பாருங்கள்.

Leave a Comment