பிரபஞ்ச அதிசயம்
மனிதர்கள் சிந்திக்கத் தொடங்கிய காலத்திலிருந்து கடவுள் எப்படி இருப்பார் என்ற கேள்வி இருக்கிறது. அவரவருக்குத் தெரிந்த வழியில் கடவுளுக்கு உருவம் கொடுத்திருக்கிறார்கள். இந்துக்களிடம் கேட்டால் விஸ்வரூப தரிசனத்தைக் காட்டுவார்கள். இஸ்லாமியர்களிடம் கேட்டால் பிரபஞ்சமே அல்லா என்பார்கள். ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்கள் விரும்பும் வகையில் ஒரு கடவுள் இருக்கிறார்.
கரடியிடம் கேட்டால் கடவுள் மிகப்பெரிய கரடியாக இருப்பார். யானையிடம் கேட்டால் மிகப்பெரிய யானையே கடவுள் என்று சொல்லும். அந்த வகையில் மனிதரின் பார்வைக்கு இந்த பிரபஞ்சம் மிகப்பெரியது. ஆரம்பமும் முடிவும் இல்லாமல் போய்க்கொண்டே இருக்கிறது. அதனால் இத்தனை பெரிய பிரபஞ்சத்தைப் படைத்த கடவுள் இதை விட பெரியவர் என்று சொல்கிறார்கள்.
கற்பனைக்கும் எல்லையுண்டு
உண்மை என்னவென்றால் மனிதரின் கற்பனை சக்திக்கும் ஓர் எல்லை இருக்கிறது. அதாவது, இந்த பிரபஞ்சத்தைத் தாண்டி வேறு எதுவும் மனிதரால் சிந்திக்க முடியாது. தொட்டியில் இருக்கும் மீனிடம் கடல் மிகவும் பெரியது என்று சொன்னால், அது மிகப்பெரிய தொட்டியை மட்டுமே கற்பனை செய்ய முடியும். அப்படித் தான் மனிதரின் கற்பனையில் தோன்றுபவர் உண்மையில் கடவுள் இல்லை. மனிதரைப் படைத்ததும், மனிதர் வாழ்க்கையைத் தீர்மானிப்பதும் கடவுள் இல்லை.
உண்மையில் கடவுள் இருக்கிறார் என்றால், அவரே இத்தனை பெரிய பிரபஞ்சத்தைப் படைத்தார் என்றால் அவருக்கு மனிதர்கள் ஒரு பொருட்டே இல்லை. அந்த கடவுளை மனிதரால் கண்டுபிடிக்க முடியாது. அவர் நிச்சயம் காசி, ஜெருசலேம், மெக்காவில் இருக்க மாட்டார். பூஜைக்கும் பிரேயருக்கும் மயங்கவும் மாட்டார். அதனால், கடவுளைத் தேடுவதைக் கைவிடுங்கள். உங்கள் வாழ்க்கையை நீங்களே வாழ வேண்டும். அதை மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
