மந்திரச்சொல்
வாழ்க்கையின் மிகப்பெரிய உண்மைகளில் ஒன்று, நாம் விரும்பும் பல நல்ல விஷயங்களுடன், விரும்பாத சில அனுபவங்களும் இணைந்தே வருவதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான்.
ரோஜா பறிக்க வேண்டுமென்றால், முட்களை சகித்துக்கொள்ள வேண்டும். வெற்றி வேண்டுமென்றால் பல தோல்விகளை ஏற்க வேண்டியிருக்கும். பழம் வேண்டும் ஆனால், சருகுகள் விழக்கூடாது என்பதுதான் மனித மனத்தின் முரண்பாடு!
வாழ்க்கை உறவுக்கும் இது பொருந்தும். குழந்தை புத்திசாலியாக வளர வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால், அவர்களிடம் பிடிவாதம், கோபம், தவறுகள் இருக்கக்கூடாது என்று நினைக்கிறோம். துணை அன்பாக இருக்கவேண்டும் ஆனால், அவர் மதிப்பு, மரியாதைக்கு சண்டை போடக்கூடாது என்று விரும்புகிறோம்.
உடல் ஆரோக்கியத்தை விரும்புகிறார். ஆனால், உணவுப் பழக்கம், உடற்பயிற்சி கட்டுப்பாடுகளை விரும்புவதில்லை. மாணவன் நிறைய மதிப்பெண்ணுக்கு ஆசைப்படும் மாணவர் கஷ்டப்பட்டு படிப்பதற்கு மறுக்கிறார்.
உளவியல்ரீதியாகப் பார்த்தால், மனித மூளை உடனடியாகக் கிடைக்கும் மகிழ்ச்சியை விரும்புவதோடு, வலி மற்றும் அசௌகரியங்களைத் தவிர்க்கவும் முயல்கிறது. இதனால், நீண்டகால நன்மையைத் தரக்கூடிய செயல்களை தள்ளிப்போடுகிறோம்.
படிக்க ஆசை வரும். ஆனால், செல்போனை கீழே வைக்க மனம் வராது. பணத்தைச் சேமிக்க வேண்டும் என்பது தெரியும். ஆனால், தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க விரும்புவதில்லை. உறவைச் சரிசெய்ய ஆசை இருக்கும், ஆனால் சமாதானம் பேசுவதற்கு தயக்கம் தடையாக நிற்கும்.
நாம் விரும்பும் பலனுக்காகச் செய்ய வேண்டிய முயற்சியையும், தவிர்க்க முடியாத சிரமங்களையும் ஏற்றுக்கொள்ளாமல், அந்தப் பலனை மட்டும் எதிர்பார்ப்பது நடைமுறையில் சாத்தியமே இல்லை.
வெற்றி பெறுபவர்களின் வாழ்க்கையில் வெளியில் தெரிவது சாதனைகள். ஆனால், அந்தச் சாதனைகளுக்குப் பின்னால் எத்தனை முயற்சிகள், நிராகரிப்புகள், திருத்தங்கள், ஏமாற்றங்கள் இருக்கின்றன என்பது பல நேரங்களில் தெரிவதில்லை.
பழம் வேண்டும் என்றால் மரத்தை வளர்க்க வேண்டும். மரத்தை வளர்க்க வேண்டும் என்றால், வளர்ச்சியின் ஒரு பகுதியாக வரும் சிரமங்களையும் எதிர்கொள்ள வேண்டும்.
ஆனால், வாழ்க்கை என்பது நம்முடைய விருப்பங்களுக்குக் கட்டுப்பட்ட இயந்திரம் அல்ல. நாம் நேர்மையாக உழைத்தாலும் சில நேரங்களில் தோல்வி ஏற்படலாம். அன்பாக நடந்துகொண்டாலும் ஒருவர் நம்மைப் புரிந்துகொள்ளாமல் போகலாம். நன்றாகத் திட்டமிட்டிருந்தாலும் எதிர்பாராத சிக்கல்கள் வரலாம். எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் மனம் படைத்தவருக்கே வெற்றி சாத்தியம்.
வாழ்க்கையில் நமக்குப் பிடித்த பல விஷயங்களுடன், நமக்குப் பிடிக்காத சில அனுபவங்களும் இணைந்திருக்கும். அன்புடன் சில கருத்து வேறுபாடுகள் வரும். வளர்ச்சியுடன் சில சிரமங்கள் வரும். வெற்றியுடன் பொறுப்புகள் வரும். மாற்றத்துடன் நிச்சயமற்ற தன்மை வரும்.
அவற்றில் எதை ஏற்றுக்கொள்ள வேண்டும், எதை மாற்ற வேண்டும், எதிலிருந்து விலக வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வதுதான் வாழ்க்கை அறிவு.
ஏனென்றால், வாழ்க்கையின் நோக்கம் சருகுகள் விழாத மரத்தைத் தேடுவது அல்ல சருகுகள் விழுந்தாலும், நமக்குப் பயனுள்ள பழங்கள் தரும் மரத்தை அன்போடு வளர்ப்பதுதான்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
