வளர்ச்சிக்கு ஆசைப்பட்டால், சொகுசை விட்டு வெளியேறுங்கள்.

மந்திரச்சொல்

அதிக சிரமம் இல்லாத வேலையில் இருப்பதை நிம்மதி என்று நினைக்கிறார்கள். தொந்தரவு இல்லாத ஒரு வாடகை வீட்டில் வசிப்பதை மகிழ்ச்சி என்று நம்புகிறார்கள். நீண்ட காலத்துக்குப் பிறகு அதில் ஒரு சிக்கல் வரும்போது, அடுத்தகட்டத்துக்கு நகராமல் காலம் தாழ்த்திவிட்டேன் என்று வருந்துகிறார்கள்.

வசதியான வாழ்க்கை நமக்கு நிம்மதியைத் தரலாம். ஆனால், தொடர்ந்து வசதிக்குள்ளேயே வாழும்போது, சவால்களை எதிர்கொள்ளும் திறன் குறைந்துவிடுகிறது. புதியதை முயற்சிக்கத் தோன்றுவதில்லை.

இதற்கு அழுத்தமான உதாரணம் ஹாவர்டு ஷூல்ட்ஸ். அமெரிக்காவின் புரூக்ளினில் ஏழ்மையான குடும்பச் சூழலில் வளர்ந்த ஷூல்ட்ஸின் வாழ்க்கையில் வசதிகள் அதிகம் இல்லை. பின்னர் அவர் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தபோது, அவருக்குப் போதுமான வருமானம் கிடைத்தது. வாழ்க்கை நன்றாக இருந்தாலும், அந்த நிம்மதி அவருக்குப் போதுமானதாக இல்லை. வளர்ச்சிக்கு ஆசைப்பட்டார்.

இத்தாலிய காபி கடைகளின் கலாசாரத்தை அமெரிக்காவில் உருவாக்கும் புதிய முயற்சியை மேற்கொண்டார். காபி வாங்கும் இடமாக மட்டும் இருந்ததை, மக்கள் அமர்ந்து பேசவும் வேலை செய்யவும் நேரம் செலவிடவும் கூடிய இடமாக ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தைப் பிரபலப்படுத்தினார். சிறிய காபி வணிகம், ஆயிரக்கணக்கான கடைகளைக் கொண்ட உலகளாவிய நிறுவனமாக மாறியது.

இந்த சொகுசு போதும் என்று அவர் நினைத்திருந்தால் இப்படிப்பட்ட பிரமாண்ட வளர்ச்சி அவருக்குக் கிடைத்திருக்காது. ஒரு கட்டத்தில் நமக்கு கிடைத்த வசதி, பாதுகாப்பான சிறைச்சாலையாக மாறிவிடலாம். வசதி நம்மை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்; கட்டுப்படுத்துவதாக அல்ல.

சொகுசிலிருந்து வெளியே வருவது என்றால் வீட்டை விற்றுவிட்டு தெருவில் வாழ்வதல்ல. வசதிகளை எல்லாம் துறப்பதுமல்ல. அதன் உண்மையான பொருள், பயமாக இருந்தாலும் பேசுவது. தெரியாவிட்டாலும் கற்றுக்கொள்வது. தோல்வி ஏற்படலாம் என்றாலும் முயற்சிப்பது. பழைய பழக்கங்கள் பிடித்திருந்தாலும் புதிய பழக்கங்களை உருவாக்குவது. என்னால் முடியாது என்பதற்குப் பதிலாக முயற்சி செய்து பார்க்கிறேன் என்று சொல்வது.

வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் பல நேரங்களில் ஒரு சிறிய அசௌகரியத்தில்தான் தொடங்குகின்றன. சிறிய சிரமங்கள்தான் பெரிய மனிதரை உருவாக்குகின்றன. வசதி உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும், சவால் உங்கள் திறனை அதிகரிக்கும்.

வசதியை வெறுக்க வேண்டியதில்லை. ஆனால் வசதிக்கு அடிமையாகிவிடக் கூடாது. நாம் இருக்கும் இடம் வசதியாக இருக்கலாம். ஆனால் நாம் அங்கேயே நின்றுவிட்டால், அந்த வசதி நமது வளர்ச்சிக்கு தடையாகிவிடும்.

நேற்று இருந்த நம்மைவிட இன்று கொஞ்சம் துணிச்சலானவராகவும், அறிவானவராகவும், ஒழுக்கமானவராகவும், திறமையானவராகவும் மாறுவதுவே உண்மையான வளர்ச்சி. அதனால், வாழ்க்கையில் அடுத்த முறை ஒரு சிரமமான வாய்ப்பு உங்கள் முன் வந்தால், தயங்கி பின்வாங்காதீர்கள்.

பல நேரங்களில், நாம் தப்பிக்க நினைக்கும் அந்தச் சிரமத்திற்குப் பின்னால் நமது அடுத்த கட்ட வளர்ச்சி மறைந்திருக்கும்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment