நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பது பொய். நாம் ஏமாறுகிறோம் என்பதே உண்மை

மந்திரச்சொல்

நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாந்து, நடுத்தெருவில் நிற்கும் மனிதர்களை நீண்ட காலமாக பார்த்துக்கொண்டு இருக்கிறோம். ஆனாலும், புதிய நிதி நிறுவனம் இப்போது தொடங்கப்பட்டாலும், முதல் ஆளாக ஓடிப்போய் பணம் கட்டும் மனிதர்கள் இருக்கிறார்கள்.

ஆரம்ப காலத்தில் பணம் கட்டினால் நிச்சயம் டபுள் மடங்கு லாபம் கிடைத்துவிடும் என்ற ஆசையில் அவசரமாக பணம் கட்டுகிறார்கள். பேராசையும், அவசரமும் கண்களை மறைக்கிறது. இருடியம், மண்ணுளிப் பாம்பு, தங்கக்காசு போன்றவை சீட்டிங் ஆயுதம் என்பது தெரிந்தும் பணம் கொடுக்கிறார்கள். ஏமாற்றப்பட்ட பிறகு கொஞ்சமும் யோசிக்காமல், ‘என்னை ஏமாற்றிவிட்டார்கள்’ என்று புலம்புகிறார்கள்.

மோசடி செய்பவர் யாரையும் வலுக்கட்டாயமாக இழுப்பதில்லை. அவர் ஒரு ஆசையை விற்பனை செய்கிறார். குறைந்த பணத்தில் அதிக லாபம் என்கிறார். சில மாதங்களில் பணம் இரட்டிப்பு ஆகும் என்கிறார். இன்று முதலீடு செய்தால் நாளை பெரிய வருமானம் என்கிறார். அதோடு இந்த ஆஃபர் சில நாட்களுக்கு மட்டும் என்று அவசரப்படுத்துகிறார்.

அவசரத்தைத் தூண்டுவதால் விரைந்து முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. 25% வருமானம் உறுதி என்று சொல்கிறார்கள். எப்படி சாத்தியம் என்று கேட்பதற்குப் பதிலாக, எவ்வளவு லாபம் வரும் என்று கணக்கு பார்ப்பதால், பாதுகாப்பை ஆராய்வதை மனம் தடுக்கிறது. அதன்பிறகு, அவர் நல்லவராகப் பேசினார், அவரை முழுமையாக நம்பினேன், அவர் இப்படிச் செய்வார் என்று கனவிலும் நினைக்கவில்லை என்கிறார்கள்.  

வாய் வார்த்தை உண்மையாகாது, நண்பர் என்பதற்காக முதலீடு பாதுகாப்பாகி விடாது. உறவினர் என்பதற்காக தொழில் லாபகரமாகாது. பிரபலமானவர் பரிந்துரைக்கிறார் என்பதற்காக முதலீடு உண்மையாகாது.

பொதுவாக மனித மூளை நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக அது சில மனக் குறுக்குவழிகளைப் பயன்படுத்துகிறது. பலர் செய்கிறார்கள் என்றால் சரியாகத்தான் இருக்கும். பெரிய மனிதர்களின் ஆலோசனை சரியாக இருக்கும். இவ்வளவு பேர் பணம் போட்டிருக்கிறார்கள் என்பதால் நானும் போடலாம். இவ்வளவு லாபம் கிடைத்ததாகச் சொல்வது உண்மையாக இருக்கும் என்ற நம்பிக்கை உளவியல் தாக்கம் ஏற்படுத்துகிறது. அதனால், என்னை யாரும் ஏமாற்ற முடியாது என்று நினைப்பவர்களும் ஏமாறலாம்.

பொதுவாக ஏமாற்றத்துக்கு மூன்று அழுத்தங்கள் காரணமாக இருக்கின்றன. விரைவாக பணம் பெருக வேண்டும். மற்றவர்களைவிட முன்னேற வேண்டும். அவசரமாக முடிவெடுக்க வேண்டும். இந்த ஆசைகளை கட்டுப்படுத்தும் அறிவு முக்கியம்.

யாராவது உடனே பணம் செலுத்தச் சொன்னால், ஏன் இவ்வளவு அவசரம் என்று கேளுங்கள். யாரிடமும் சொல்லாதீர்கள் என்றால், ஏன் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று கேளுங்கள். ஆபத்து இல்லை என்றால், இவ்வளவு லாபம் சாத்தியமா என்று கேளுங்கள். இந்த கேள்விகள் பாதுகாப்பு தரலாம்.

ஒருமுறை ஒருவர் நம்மை ஏமாற்றினால், அது அவருடைய தவறு. இரண்டாவது முறையும் ஏமாறினால், அது நம் தவறு.

பணத்தைப் பாதுகாப்பதற்கு வங்கி கணக்கு மட்டும் போதாது. நிதி அறிவு வேண்டும். ஆதாரத்தைச் சரிபார்க்கும் பழக்கம் வேண்டும். அவசரத்தில் முடிவு எடுக்காத மனம் வேண்டும். ‘இல்லை’ என்று சொல்லும் துணிவு வேண்டும். ஏனென்றால் பணத்தை இழந்த பிறகு சம்பாதித்துவிடலாம். ஆனால் பணத்தை இழக்கச் செய்த மனநிலையை மாற்றவில்லை என்றால் மீண்டும் மீண்டும் ஏமாற்றமே கிடைக்கும்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment