மந்திரச்சொல்
எனக்குப் பிடித்ததை எல்லாம் செய்வதுதான் சுதந்திரம் என்று மக்கள் நினைக்கிறார்கள். உண்மையில் அது, முழுமையான சுதந்திரம் அல்ல. பிறரது கட்டாயத்திற்காக எதையும் செய்யாமல் இருப்பது சுதந்திரம்.
சிறை என்றால் நான்கு சுவர்கள் மட்டுமல்ல. பயம், குற்ற உணர்வு, நிராகரிக்கப்படும் அச்சம், பிறரின் எதிர்பார்ப்பு, சமூக அழுத்தம் ஆகியவை சிலருக்கு சிறையாக மாறிவிடுகின்றன.
எனக்குப் பிடிக்கவில்லை என்று தைரியமாக சொல்ல முடியாதவர் சுதந்திரமானவர் இல்லை. வேண்டாம் என்று சொல்ல முடியாதவர் சுதந்திரமானவர் இல்லை. இது என் வாழ்க்கை, என் முடிவை நான் எடுக்கிறேன் என்று சொல்பவர் சுதந்திரமானவர்.
ஒரு இளைஞனுக்கு ஓவியம் வரைவது மிகவும் பிடிக்கும். ஓவியக் கல்லூரியில் சேர விரும்புகிறான். ஆனால் குடும்பத்தினர், மருத்துவராக வேண்டும் என்று வற்புறுத்தி சேர்க்கிறார்கள். அவன் மருத்துவம் படித்து, நல்ல மதிப்பெண்கள் பெறுகிறான். நல்ல மருத்துவராக இருக்கிறான் என்றாலும், மனதுக்குள் வெறுமையை உணர்கிறான். வெளியில் பார்ப்பவர்களுக்கு அவன் வெற்றி பெற்றவன். ஆனால், உண்மையில் அவன் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை இழந்தவன்.
திருமணத்திலும் இந்த சுதந்திரம் அவசியம். ஒரு கணவன் அல்லது மனைவி, நான் விரும்பாததை செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தால் வருத்தம் அதிகமாகும், மன அழுத்தம் உருவாகும். ஒரு நாள் அந்த உறவு சிதைந்து போகும்.
அதிக அன்பு, அதிக பாசம் என்று சொல்லிக்கொள்ளும் அதேநபர், உன் நண்பர்களைச் சந்திக்கக்கூடாது, உன் பெற்றோரிடம் பேசக்கூடாது, நீ இப்படித்தான் உடை அணிய வேண்டும், நீ வேலைக்கு செல்லக்கூடாது என்பதெல்லாம் கட்டுப்பாடுகள் விதிப்பது, தனிப்பட்ட எல்லைகளை அவமதிக்கும் ஆதிக்கம்.
நான் உன்னை நேசிக்கிறேன். அதே நேரத்தில் உனக்கான முடிவுகளை நீயே எடுக்கலாம் என்பதுதான் ஆரோக்கிய உறவு.
நல்லவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக எல்லாவற்றுக்கும் சரி என்று தலையாட்டுகிறார்கள். உறவினர் உதவி கேட்கும்போது, தங்களால் முடியாவிட்டாலும் செய்கிறார்கள். அலுவலகத்தில் கூடுதல் வேலை கொடுக்கப்படும்போது, நோ சொல்ல முடியாமல் ஏற்றுக்கொண்டு வருத்தப்படுகிறார்கள். இங்கே பிரச்சினை பிறரால் வரவில்லை. தனது எல்லைகளை வெளிப்படுத்த முடியாத மனநிலையால் வருகிறது.
இப்போது என்னால் முடியாது, இதற்கு நான் சம்மதிக்கவில்லை, இந்த முடிவு எனக்கு ஏற்றதாக இல்லை, இதைச் செய்ய விருப்பமில்லை என்று உறுதியாக அதேநேரம், பிறர் மனம் நோகாமல் சொல்வதற்குக் கற்றுக்கொள்வதே சுதந்திரத்திற்கான வழி.
ஒரு பெண்ணுக்கு தனியாக உலகை சுற்றிப் பார்க்க ஆசை இருக்கலாம். ஒரு ஆணுக்கு தனக்குப் பிடித்த தொழிலைத் தேர்ந்தெடுக்க ஆசை இருக்கலாம். ஒருவர் திருமணம் செய்யாமல் இருக்க விரும்பலாம். இன்னொருவர் வாழ்க்கையில் தாமதமாக தொழிலை மாற்ற விரும்பலாம். அவர்களின் முடிவு பிறருக்கு தீங்கு செய்யாத வரை, அவர்களின் வாழ்க்கை பற்றிய இறுதி முடிவு அவர்களுக்கே உரியது. பிறர் கருத்து ஆலோசனையாக இருக்கலாம்; அது வாழ்க்கை கட்டளையாக மாறக்கூடாது.
குழந்தைகளுக்கும் சுதந்திரம் தேவை, நான் சொல்வதை மட்டும் செய் என்று வளர்க்கப்படும் குழந்தை, கட்டுப்பட்டு நடக்கலாம். ஆனால் சுயமாக முடிவு எடுக்க கற்றுக்கொள்ள முடியாமல் போகலாம். சுதந்திரம் என்பது குழந்தையை கட்டுப்பாடில்லாமல் விடுவது அல்ல. சரியான எல்லையை தேர்வு செய்ய கற்றுக்கொடுப்பது.
முதுமையிலும் சுதந்திரம் தேவை. பெற்றோர் வயதாகிவிட்டார்கள் என்பதற்காக அவர்களின் வாழ்க்கையை முழுவதுமாக பிள்ளைகள் கட்டுப்படுத்தக்கூடாது.
ஒருவர் உண்மையில் சுதந்திரமாக இருக்கிறாரா என்பதை அறிய ஒரு எளிய கேள்வி இருக்கிறது. விரும்பாத ஒன்றை வேண்டாம் என்று சொல்ல முடிந்தால், அவர் சுதந்திரமானவர் அர்த்தம்.
நாம் வாழ்க்கையில் பணத்தை இழக்கலாம். பதவியை இழக்கலாம். சில உறவுகளை இழக்கலாம். ஆனால் முடிவுகளை நாமே எடுக்கும் உரிமையைப் பாதுகாப்பதே சுதந்திரம்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
