ஞானகுரு பதில்கள்
கேள்வி : நமது உடலில் இருந்து பிரியும் உயிர் எங்கே போகிறது..?
- ஸ்ரீராம், நாகப்பட்டினம்.
ஞானகுரு :
தத்துவார்த்தமாகச் சொல்வது என்றால் புத்தர் கூறிய பதில் சரியாக இருக்கும். ஒரு விளக்கு அணைந்துவிட்டால் அந்த ஒளி மறைந்துபோகிறது. இதுவே மரணம். ஒரு விளக்கில் இருந்து ஆயிரம் விளக்கிற்கு ஒளி கொடுக்க முடியும். இதுவே ஜனனம். ஒளி எங்கே இருந்து வரவும் இல்லை, எங்கேயும் மறையவும் இல்லை. எல்லாம் இயற்கையில் இருக்கிறது.
இதை அறிவியல்ரீதியாகச் சொல்வது என்றால் உயிர் என்பது இயக்க ஆற்றல். பேட்டரியில் இருக்கும் மின் ஆற்றல் தீர்ந்துபோனதும் செயல் இழப்பது போன்று உடலில் இருக்கும் ஆற்றல் தீர்ந்துபோனதும் உயிர் போய்விடுகிறது. உயிர் வருவதையும் போவதையும் நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், வாழ்க்கையை நம் விருப்பப்படி வாழ முடியும். அதை மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
