ஞானகுரு பதில்கள்
கேள்வி : என்னுடைய மேனேஜர் எதற்கெடுத்தாலும் என் மீது கோபப்படுகிறார்… அலுவலகம் நரகமாக இருக்கிறது. அவர் குணத்தை மாற்ற முடியுமா..?
சி.அயோத்திதாசன், சென்னை.
ஞானகுரு ;
யாருடைய குணத்தையும் மாற்ற முடியாது. ஆனால், அவர் உங்களிடம் நல்லபடியாக நடக்கும் படி செய்ய முடியும். புலி மோசமான விலங்கு என்றாலும் அதை பழக்கப்படுத்தி நெருப்பு வளையத்தில் தாவச்செய்ய முடியும் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் மேனேஜரின் கோபம் என்ற மோசமான பக்கத்தை மட்டும் பார்க்காமல் அவரது பாசிடிவ் பக்கங்களைப் பாருங்கள். அவரது ஆளுமைத் திறன், அவரது பேச்சாற்றல், வேலை நுணுக்கம் போன்ற உண்மையான திறமைகளைக் கண்டுபிடித்து பாராட்டுங்கள். உங்களிடம் தவறுகள் இருந்தால் திருத்திக் கொள்ளுங்கள். அவரது பணிக்கு உங்களால் முடிந்த உதவிகள் செய்யுங்கள். நீங்கள் உண்மையான உழைப்பாளி என்பதை அவர் புரிந்துகொண்டால், அவரும் உங்களைப் பாராட்டத் தொடங்குவார். புலியை பழக்க முடியும் எனும்போது அதிகாரியை மாற்ற முடியாதா..? நம்பிக்கையுடன் செயலாற்றுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
