நம்பிக்கை எனும் வரம்
இந்த பிரமாண்டமான பிரபஞ்சத்தின் அழகையும் ஆற்றலையும் வியக்காத மனிதர்கள் யாரும் இல்லை. சூரியன், சந்திரன், மலை, பள்ளத்தாக்கு, கடல், ஆறு, அருவிகள், மரங்கள், விலங்குகள், பூக்கள், மனிதர்கள் என்று எல்லாமே இயற்கையின் கைவண்ணம்.
கடவுள் நம்பிக்கை இல்லாத மனிதர்கள் கூட இயற்கையை வணங்குகிறார்கள். இந்த பிரபஞ்சமே உயிர் கொடுக்கிறது, உடல் வளர்க்கிறது, உறவு தருகிறது என்று கொண்டாடுகிறார்கள். நம்மை வாழ வைக்கும் இயற்கையைப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு மனிதரின் கடமை என்கிறார்கள்.
உண்மை என்ன தெரியுமா..? இந்த பிரபஞ்சம் மனிதரிடம் இருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை. மனிதரை நம்பி இந்த பூமி இல்லை.
இதற்கு எளிய உதாரணம் சொல்லலாம். எல்லா வீடுகளிலும் எறும்பு, ஈ, கொசு போன்ற பூச்சியினங்கள் எக்கச்சக்கமாக இருக்கின்றன. மனிதர்களின் உணவை சாப்பிட்டு அவையும் வாழ்கின்றன.
இந்த மனிதரே நமக்கு வாழ்வு கொடுக்கிறார், அதனால் இவருக்கு நாம் நன்றி சொல்வோம், கும்பிடுவோம், பூஜை செய்வோம் என்று அந்த பூச்சியினங்கள் தினமும் பூஜிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அது ஒருபோதும் மனிதருக்குத் தெரியப்போவதில்லை. எனவே, பூச்சிகள் செய்வது அர்த்தமற்ற செயல். அப்படித்தான் இந்த பிரபஞ்சத்தை மனிதர்கள் கும்பிடுவதும் கொண்டாடுவதும் அர்த்தமற்ற செயல்.
இயற்கை மனிதருக்கு நல்லது மட்டுமே செய்வதில்லை. தீமையும் செய்கிறது. அதாவது கனமழை, வெள்ளம், புயல், பூகம்பம், சுனாமி போன்ற அசம்பாவிதங்களையும் இயற்கை உருவாக்குகிறது. டைனோசரஸ், மாமூத் போன்ற எத்தனையோ உயிரினங்களை உருத்தெரியாமல் அழித்தொழித்திருக்கிறது. இயற்கையை மனிதரால் தடுத்து நிறுத்த முடியாது, பழி தீர்க்கவும் முடியாது.
இயற்கை அதன் வழியில் செயல்படுகிறது. மனிதன் உட்பட எந்த உயிரினத்தின் வேண்டுதலையும், விருப்பங்களையும் இயற்கை கண்டுகொள்வதே இல்லை. எந்த உயிரையும்விட மனிதன் மேலானவன் இல்லை. ஏனென்றால், கரப்பான் பூச்சியுடன் ஒப்பிட்டுப்பார்த்தால், அவை மனிதரை விட இயற்கையை எதிர்த்துத் தாக்குப்பிடிக்கும் சக்தி அதிகம் கொண்டவை.
எனவே இயற்கையை வணங்குவதும், பாதுகாப்பதற்கு கொடி பிடிப்பதும் அர்த்தமற்ற செயல். இயற்கையை ரசித்து வாழ்வதே போதும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
